முகப்பு
தற்போதைய செய்திகள்

தொகுதி மறுவரையறை ஒரு கொடூரமான நடவடிக்கை: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

தொகுதி மறுவரையறை என்பது கூட்டாட்சியின் சமநிலையை சீர்குலைக்கும் கொடூர நடவடிக்கை என ப.சிதம்பரம் கூறியிருப்பது..

Updated On : 15 ஏப்ரல், 2026 at 9:55 AM
செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம். - ட்விட்டர்
பகிர்:
Updated On : 15 ஏப்ரல், 2026 at 9:45 AM

புதுதில்லி: தொகுதி மறுவரையறை என்பது கூட்டாட்சியின் சமநிலையை சீர்குலைக்கும் கொடூர நடவடிக்கை என காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் 106-ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் 2023-ஐ அமல்படுத்துவதற்கான சட்டத் திருத்த மசோதா ஏப்.16 முதல் ஏப்.18 வரை நடைபெறவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் அறிமுகமாகவுள்ளது. அப்போது மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 850-ஆக அதிகரிக்கப்பட்டு அதில் 280 தொகுதிகள் மகளிருக்கு ஒதுக்கப்படவுள்ளன.

வரைவு மசோதாவின்படி, மக்களவை, மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கான தொகுதிகள் சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்படும்.

Advertisement

Updated On : 15 ஏப்ரல், 2026 at 9:45 AM

எனவே, 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு தரவுகளின் அடிப்படையில் 2029-ஆம் ஆண்டு மக்களவை மற்றும் மாநிலங்களின் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை அமல்படுத்தும் நோக்கில் அரசமைப்புச் சட்டப் பிரிவு 81-இல் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.

மாநிலங்களுக்கு 815, யூனியன் பிரதேசங்களுக்கு 35: இந்தச் சட்டத் திருத்த மசோதாவின்படி மாநிலங்களில் உள்ள மக்களவைத் தொகுதிகளில் இருந்து அதிகபட்சமாக 815 உறுப்பினா்களும், யூனியன் பிரதேசங்களில் இருந்து நாடாளுமன்றம் முன்மொழியும் சட்டத்தின் அடிப்படையில் 35 உறுப்பினா்களும் தோ்வு செய்யப்படவுள்ளனா்.

இத்துடன் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்வதற்கான தொகுதி மறுசீரமைப்பு மசோதா மற்றும் சட்டப் பேரவைகளைக் கொண்ட தில்லி, ஜம்மு-காஷ்மீா் மற்றும் புதுச்சேரி ஆகிய மூன்று யூனியன் பிரதேசங்களில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வழிவகை செய்யும் மசோதாக்களை அறிமுகப்படுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், தொகுதி மறுவரையறை என்பது கூட்டாட்சியின் சமநிலையை சீர்குலைக்கும் கொடூர நடவடிக்கை என காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் எக்ஸ் பக்க பதிவில் தெரிவித்திருப்பதாவது:

அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டம் பற்றி நான் கடந்த ஒரு வாரமாகச் சொல்லி வரும் அச்சம் இன்று நிரூபணமாகியிருக்கிறது.

மக்களவையின் பலம் 543 -இல் இருந்து 815 ஆக, அதாவது 50 சதவீதம் அதிகரிப்படும்போது, தமிழ்நாட்டின் தற்போதைய தொகுதிகளின் 39 -இல் இருந்து 58 ஆக உயரும் என்று சொன்னார்கள். தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டில் மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை 58 ஆக உயரும் என்பது ஒரு மாயை.

தொகுதிகளின் எண்ணிக்கையை 58 ஆக உயர்த்துவது போல் உயர்த்திவிட்டு மறுவரையறை செய்து தொகுதிகளின் எண்ணிக்கையை 46 ஆக குறைத்துவிடுவார்கள். அதே நேரத்தில், உத்தரப் பிரதேசத்தின் தற்போதைய எண்ணிக்கை 80. இது முதலில் 120 ஆக உயரும், தொகுதி மறுவரையறைக்குப் பின் மேலும் அதிகரித்து சுமார் 140 ஆக மேலும் உயரும்

தமிழ்நாடு மட்டுமல்ல மக்கள் தொகையை நிலைப்படுத்திய 5 தென்னிந்திய மாநிலங்களிள் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை பிரதிநித்துவம் 24.3 சதவீதத்தில் இருந்து 20.7 சதவீதமாக குறையும். மக்களவையில் தென் மாநிலங்களின் குரல் அழுத்தப்படும், ஒடுக்கப்படும். இது ஜனநாயகத்தில் கூட்டாட்சிச் சமநிலையைத் தீவிரமாக மாற்றியமைக்கும் நோக்கம் கொண்ட, இது ஒரு வஞ்சகமான, தீய நடவடிக்கையாகும்.

அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டத்தை ஒற்றுமையாக எதிர்த்து தோற்கடிக்க வேண்டும் என்று சிதம்பரம் கூறியுள்ளார்.

Updated On : 15 ஏப்ரல், 2026 at 9:45 AM
summary

When the strength of the Lok Sabha is increased by 50% from 543 to 815, the strength of TN will seemingly increase from 39 to 58. But this is an illusion. When delimitation takes place, it will reduce to 46

Updated On : 15 ஏப்ரல், 2026 at 9:48 AM

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.