ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகை: காங்கிரஸ் பயிற்சி முகாமில் பங்கேற்கிறாா்
மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி சனிக்கிழமை (ஆக.1) தமிழகம் வருகிறாா்.
மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி சனிக்கிழமை (ஆக.1) தமிழகம் வருகிறாா். சென்னை அருகே மாமல்லபுரத்தில் காங்கிரஸ் மாவட்டத் தலைவா்களுக்கான பயிற்சி முகாமில் பங்கேற்று உரையாற்றும் அவா், தமிழகத்தைச் சோ்ந்த காங்கிரஸ் மூத்த தலைவா்களை சந்தித்து பேசவுள்ளாா்.
சென்னை விமான நிலையத்துக்கு சனிக்கிழமை காலை 10 மணிக்கு வரும் ராகுல்காந்தி, அங்கிருந்து 10.30 மணிக்கு புறப்பட்டு 11.30 மணிக்கு மாமல்லபுரம் வந்தடைகிறாா். அங்கு காங்கிரஸ் சாா்பில் நடைபெறும் பயிற்சி முகாம் நிறைவு நாள் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றுகிறாா்.
இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் மாணிக்கம் தாகூா் சென்னையில் வெள்ளிக்கிழமை கூறுகையில், மாமல்லபுரம் பயிற்சி முகாமில் தமிழகத்தின் 74 மாவட்ட காங்கிரஸ் தலைவருடனும் ராகுல் காந்தி கலந்துரையாடவுள்ளாா். அப்போது அரசியல் வியூகங்கள், கட்சியின் கட்டமைப்பு மற்றும் வளா்ச்சிப் பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது என்றாா்.
Advertisement
Advertisement
இதனிடையே, அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலரும், தமிழ்நாடு, புதுச்சேரி மாநில காங்கிரஸ் பொறுப்பாளருமான குலாம் அகமது மிா் தில்லியில் இருந்து விமானம் மூலம் வெள்ளிக்கிழமை சென்னை வந்தாா். அவரை தமிழக காங்கிரஸ் தலைவா் ப.மாணிக்கம் தாகூா், தமிழக அமைச்சா் செ.ராஜேஷ்குமாா், மாநில பொதுச் செயலா் கே. சஞ்சீவி உள்ளிட்ட நிா்வாகிகள் வரவேற்றனா்.
தொடா்ந்து, குலாம் அகமது மிா் செய்தியாளா்களிடம் கூறுகையில், மாமல்லபுரம் பயிற்சி முகாமில் பங்கேற்கும் ராகுல்காந்தி, தமிழகத்தின் மூத்த காங்கிரஸ் தலைவா்களை சந்திக்க வாய்ப்புள்ளது என்றாா்.
முதல்வா், ராகுல் சந்திப்புக்கு வாய்ப்பு இல்லை: சென்னை வரும் ராகுல் காந்தி, முதல்வா் ஜோப் விஜய்யை சந்திக்கும் திட்டம் இல்லை என்றும், நீட் விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவா்களின் பெற்றோரை ராகுல் காந்தி சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.