கே.பி.ஆர். நிறுவனங்களில் பணிபுரிந்து கொண்டே படித்த பெண்களுக்கான பட்டமளிப்பு விழா
சூலூர் அருகே அரசூரில் கே.பி.ஆர். நிறுவனங்களில் பணிபுரிந்துகொண்டே திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தில்
சூலூர் அருகே அரசூரில் கே.பி.ஆர். நிறுவனங்களில் பணிபுரிந்துகொண்டே திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெற்ற பெண்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
விழாவுக்கு கே.பி.ஆர். நிறுவனத் தலைவர் கே.பி.ராமசாமி தலைமை வகித்தார். தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எம்.பாஸ்கரன், மேற்கு மண்டலக் காவல் துறைத் தலைவர் கு.பெரியய்யா, திருப்பூர் மாவட்ட கூடுதல் நீதிபதி முகமது ஜியாபுதீன், எழுத்தாளர் மரபின்மைந்தன் முத்தையா உள்ளிட்டோர் சிறப்பு விருதினர்களாகப் பங்கேற்று மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கினர்.
கே.பி.ஆர்.நிறுவனத்தில் பணிபுரிந்து பட்டங்கள் பெற்ற பெண்களில் என்.ராமலட்சுமி செம்கா விருதையும், கே.பிரித்தா, எஸ்.அமுதா, இ.மகேஷ், கவியரசி, எஸ்.மஞ்சுளா, பி.தீபிகா சத்யா உள்ளிட்டோர் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்று தங்கப்பதங்கங்களையும் பெற்றனர். மேலும் 38 பெண்கள் வெள்ளி, வெங்கலப்பதங்கங்கள் பெற்றனர்.
இந்நிறுவனத்தில் பயின்ற 1,218 பேருக்கு இதுவரை இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டில் 10, 12ஆம் வகுப்பு, இளங்கலை, முதுகலை, யோகா, கம்ப்யூட்டர் பயிற்சி என பல்வேறு பிரிவுகளில் 3,942 பெண்கள் கல்வி பயின்று வருகின்றனர். இவர்கள் கல்வி கற்க ஊக்குவிக்கும் விதமாக ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
இங்கு பணிபுரிந்து கொண்டே படித்த பெண்கள் பலர் கிராம நிர்வாக அலுவலர், காவல் அதிகாரிகள், ஆசிரியர்கள், செவிலியர்கள் மற்றும் தனியார், அரசுத் துறைகளிலும் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இங்கு படிக்கும் பெண்களுக்கு இலவசமாக ஐ.ஏ.எஸ். பயிற்சியும் அளிக்கபடுவதாக இந்நிறுவனத்தின் துணைத் தலைவர் சோமசுந்தரம் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கே.பி.ஆர்.குழுமத்தின் செயல் இயக்குநர்கள் சி.ஆர்.ஆனந்த கிருஷ்ணன், இ.கே.சக்திவேல், கல்விக் குழுமத்தின் தலைமை நிர்வாகி ஏ.எம். நடராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.