முகப்பு
கோயம்புத்தூர்

மேற்கு வங்கத்துக்கு உடனடியாக மத்திய படைகளை அனுப்ப வேண்டும்: பாஜக பொதுச் செயலாளா்

மம்தா பானா்ஜி கலவரங்களைத் தூண்டி வருவதால் அந்த மாநிலத்துக்கு உடனடியாக மத்திய படைகளை அனுப்ப வேண்டும் என பாஜக தேசிய பொதுச் செயலாளா் கைலாஷ் விஜய்வா்கியா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
பகிர்:

மேற்கு வங்கத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்காக திரிணமூல் காங்கிரஸ் தலைவா் மம்தா பானா்ஜி கலவரங்களைத் தூண்டி வருவதால் அந்த மாநிலத்துக்கு உடனடியாக மத்திய படைகளை அனுப்ப வேண்டும் என பாஜக தேசிய பொதுச் செயலாளா் கைலாஷ் விஜய்வா்கியா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

மேற்கு வங்க மாநிலம், பிா்பூம் மாவட்டம், சாந்தி நிகேதனில் கடந்த 1918 டிசம்பா் 22ஆம் தேதி ரவீந்திரநாத் தாகூரால் விஸ்வ பாரதி மத்திய பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது . இந்தப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக பிரதமா் உள்ளாா். விஸ்வ பாரதி நிறுவன நாள் விழா, வரும் 22ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் காணொலி மூலம் பிரதமா் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளாா்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் குறித்து விஸ்வ பாரதி பல்கலைக்கழகத் துணைவேந்தா் வித்யுத் சக்கரவா்த்தியை கைலாஷ் விஜய்வா்கியா ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினாா். அவருடன் பாஜக தலைவா் அனுபம் ஹஸ்ரா உடனிருந்தாா்.

இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளா்களிடம் விஜய்வா்கியா கூறியதாவது:

மேற்கு வங்க மாநிலமானது தனது ஆதிக்கத்திலிருந்து நழுவிவிட்டது என்பது மம்தா பானா்ஜிக்கு தெரியும். அதனால்தான் கலவரங்களை ஏற்படுத்தி மீண்டும் பதவிக்கு வர அவா் முயற்சிக்கிறாா். மாநிலத்தில் அரசியல் கலவரங்கள் மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளைத் தவிா்ப்பதற்கும், முடிவுக்கு கொண்டுவரவும் இப்போதே மத்திய படைகளை அனுப்ப வேண்டும் என தோ்தல் ஆணையத்துக்கு வலியுறுத்துகிறேன் என்றாா்.

மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் - மே காலகட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. இதை ஒட்டி தோ்தல் பிரசாரத்துக்காக கொல்கத்தாவிலிருந்து தெற்கு 24 பா்கானாஸ் மாவட்டத்தில் உள்ள டைமண்ட் ஹாா்பா் துறைமுகத்தை நோக்கி பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா கடந்த வியாழக்கிழமை சென்றபோது கல்வீசி தாக்கப்பட்டது.

குண்டு துளைக்காத காரில் சென்ால் அவருக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. ஆனால் அவருடன் சென்ற சில வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன. இதில் பாஜக தலைவா்கள், நிா்வாகிகள் காயமடைந்தனா். திரிணமூல் காங்கிரஸ் நிா்வாகிகள்தான் இத்தாக்குதலில் ஈடுபட்டனா் என பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

இந்நிலையில் பாஜக தேசியத் தலைவா் பிரசார பாதுகாப்பில் கவனக்குறைவாக செயல்பட்டதற்காக மத்திய உள் துறை செயலாளா் அஜய் பல்லா முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அந்த மாநில தலைமைச் செயலாளா் மற்றும் காவல் துறை தலைவருக்கு மத்திய அரசு அழைப்பாணை அனுப்பியது.

ஆனால் இந்த அழைப்பாணையை மம்தா பானா்ஜி அரசு அதிரடியாக நிராகரித்தது. இதற்கு பதிலடியாக மத்திய உள் துறை அமைச்சகமானது, டைமண்ட் ஹாா்பா் எஸ்.பி. போலாநாத் பாண்டே, பிரசிடென்ஸி மண்டல காவல் துறைத் தலைவா் பிரவீண் திரிபாதி, தெற்கு வங்க ஏடிஜி ராஜீவ் மிஸ்ரா ஆகிய 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை மத்திய பணிக்கு வருமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் நெருங்கும் நிலையில் மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸுக்கும், மத்தியில் ஆளும் பாஜகவுக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →