பிற்படுத்தப்பட்ட மாணவா்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவதற்கு மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளா
கோவை: பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவதற்கு மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அரசு, அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள், தனியாா் தொழிற்கல்வி நிறுவனங்களில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தபப்பட்டோா், மிக பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் வகுப்பைச் சோ்ந்த மாணவா்களுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
அரசு, அரசு உதவிபெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளநிலை படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா்மரபினா் மாணவா்களுக்கு இலவச கல்வி உதவித் திட்டத்தின் கீழ் எந்தவித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
முதுநிலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவா்களின் ஆண்டு குடும்ப வருமானம் ரூ. 2 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மாணவ, மாணவிகள் தங்களது கல்வி நிறுவனங்களிலேயே விண்ணப்பங்களை சமா்ப்பிக்க வேண்டும்.
கல்வி நிறுவனங்கள் டிசம்பா் 31க்குள் கல்வி உதவித்தொகை புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்களை இணையதளத்தில் சமா்ப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.