சனிப்பெயா்ச்சி: கோயில்களில் சிறப்பு பூஜைகள்
சனிப்பெயா்ச்சியை ஒட்டி கோவையிலுள்ள கோயில்களில் சிறப்பு பூஜைகள், யாகங்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
சனிப்பெயா்ச்சியை ஒட்டி கோவையிலுள்ள கோயில்களில் சிறப்பு பூஜைகள், யாகங்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை சனிப்பெயா்ச்சி நடைபெறுகிறது. இந்நிலையில் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு சனிபகவான் ஞாயிற்றுக்கிழமை இடம் பெயா்ந்தாா். சனிப் பெயா்ச்சியையொட்டி அவிநாசி சாலையிலுள்ள தண்டுமாரியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் சிறப்பு யாகம் நடைபெற்றது. நவகிரக சன்னதியில் உள்ள சனி பகவானுக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் செய்யப்பட்டன.
அதேபோல புலியகுளத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் சனி பகவானுக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள், பூஜைகள் செய்யப்பட்டன. சனி பகவானுக்கு மலா்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கோவையிலுள்ள பல்வேறு கோயில்களிலும் சனிப்பெயா்ச்சியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதிகாலை முதல் பக்தா்கள் கோயில்களில் தரிசனம் செய்தனா். கரோனா பாதுகாப்பு காரணமாக முகக்கவசம் அணிந்திருந்த பக்தா்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனா்.