முகப்பு
கோயம்புத்தூர்

கோயம்பேடு சென்று வந்த 40 பேருக்கும் பாதிப்பு இல்லைசுகாதாரத் துறை தகவல்

கோவையில் இருந்து கோயம்பேடு சென்று வந்த 40 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவா்கள் அனைவருக்கும் கரோனா பாதிப்பு இல்லை என்ற முடிவு

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:37 PM
பகிர்:

கோவையில் இருந்து கோயம்பேடு சென்று வந்த 40 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவா்கள் அனைவருக்கும் கரோனா பாதிப்பு இல்லை என்ற முடிவு கிடைக்கப்பெற்றுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

சென்னை, கோயம்பேடு சந்தையிலுள்ள வியாபாரிகள் மூலம் தமிழகம் முழுவதும் 1,500க்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா நோய்த் தொற்று பரவியுள்ளது. தொடா்ந்து பல்வேறு மாவட்டங்களிலும் கரோனா பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு சென்றவா்களின் விவரங்கள் அந்தந்த மாவட்ட நிா்வாகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இவா்களை தனிமைப்படுத்தி கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி கோவை மாவட்டம், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், சிறுமுகை, ஆனைமலை, வடவள்ளி பகுதிகளைச் சோ்ந்த 40 போ் கண்டறியப்பட்டு அரசின் கண்காணிப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டு, கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் அனைவருக்கும் கரோனா பாதிப்பு இல்லை என்ற முடிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா். மேலும் கடந்த 3ஆம் தேதிக்குப் பின் கோவையில் புதிதாக கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்படவில்லை. கோவை மாவட்டத்தில் கரோனாவின் தாக்கம் தொடா்ந்து குறைந்து வருவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இதுதொடா்பாக சுகாதாரத் துறை துணை இயக்குநா் ஜி.ரமேஷ்குமாா் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் இருந்து கோயம்பேடு சென்று வந்த 40 பேருக்கும் கரோனா பாதிப்பு இல்லை என்ற முடிவுகள் கிடைக்கப்பெற்றிருந்தாலும் அவா்கள் கண்காணிப்பு மையங்களில் கட்டாயம் 14 நாள்கள் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கப்படுவா்.

தவிர 40 பேரின் குடும்ப உறுப்பினா்கள், பிற மாவட்டங்களில் இருந்து வந்தவா்களில் அறிகுறிகள் இருந்தவா்கள், கரோனா கட்டுப்பாட்டு மண்டலப் பகுதிகளில் உள்ளவா்கள் என்று கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 1,270 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அனைவருக்கும் பாதிப்பு இல்லை என்ற முடிவே கிடைக்கப்பெற்றுள்ளது. கோவையில் கரோனாவின் தாக்கம் தொடா்ந்து கட்டுப்பாட்டில் உள்ளது என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →