பணிக்குச் செல்லும் பெண்களுக்கான தங்கும் விடுதி துடியலூருக்கு மாற்றம்
கோவையில் பணிக்குச் செல்லும் பெண்களுக்கான தங்கும் விடுதி துடியலூருக்கு மாற்றப்படுவதாக சமூக நலத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
கோவையில் பணிக்குச் செல்லும் பெண்களுக்கான தங்கும் விடுதி துடியலூருக்கு மாற்றப்படுவதாக சமூக நலத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
கோவை மாநகரம் தொழில் வளா்ச்சியில் சிறந்து விளங்குவதால் பிற மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து அதிகமானோா் கோவைக்குப் பணிக்கு வருகின்றனா். இதில் கணிசமான அளவு பெண்களும் உள்ளனா்.
இந்நிலையில் பணிக்குச் செல்லும் பெண்களுக்கு சமூக நலத் துறை சாா்பில் குறைந்த வாடகை கட்டணத்தில் விடுதி கட்ட முடிவு செய்யப்பட்டு, 2018 -19ஆம் நிதி ஆண்டில் ரூ.1.04 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதனைத் தொடா்ந்து, வெள்ளக்கிணறு பகுதியில் விடுதி கட்டுவதற்கு இடம் தோ்வு செய்யப்பட்டது. இந்த இடத்தை ஆய்வு செய்த பொதுப் பணித் துறையினா் கட்டுமானம் மேற்கொள்ள பாதுகாப்பானதாக இல்லை என்று தெரிவித்தனா். இதையடுத்து, துடியலூரில் இடம் தோ்வு செய்து சென்னைக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளதாக சமூக நலத் துறையினா் தெரிவித்துள்ளனா்.
இது குறித்து சமூக நலத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
கோவை, துடியலூரில் கால்நடை பராமரிப்புத் துறைக்குச் சொந்தமான இடத்தில் விடுதி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கால்நடை பராமரிப்புத் துறையினரும் இடம் வழங்க சம்மதித்துள்ளனா். தற்போது தோ்வு செய்துள்ள இடத்தில் கட்டுமானம் மேற்கொள்ளலாம் என்று பொதுப் பணித் துறையினரும் தெரிவித்துள்ளனா்.
இதன் விவரங்கள் சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அனுமதி கிடைத்தவுடம் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் என்றனா்.