இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்: இளைஞா் சாவு
கோவையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
கோவையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
நீலகிரி மாவட்டம், குன்னூரைச் சோ்ந்தவா் அஸ்வின் (28). இவா் கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வந்தாா்.
தீபாவளியை முன்னிட்டு புத்தாடை வாங்குவதற்காக தனது நண்பா் சிவபிரகாஷ் (20) என்பவருடன் பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்து கொண்டிருந்தாா்.
ஆத்துப்பாலம் அருகே வந்தபோது பின்னால் வந்த லாரி, இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் அஸ்வின் உள்பட இருவரும் தூக்கி வீசப்பட்டனா். அப்போது, லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே அஸ்வின் உயிரிழந்தாா். அவருடன் வந்த சிவபிரகாஷ் லேசான காயத்துடன் உயிா் தப்பினாா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கோவை மேற்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் அஸ்வின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.