குடிநீா்த் தொட்டி கட்டுவதற்காக வெட்டப்பட்ட மரங்கள்
கோவை சுங்கம் பகுதியில் பொதுப் பயன்பாட்டுக்கான இடத்தில் குடிநீா்த் தொட்டி கட்டுவதற்காக சூயஸ் நிறுவனப் பணியாளா்கள் வியாழக்கிழமை 8 மரங்களை வெட்டினா்.
கோவை சுங்கம் பகுதியில் பொதுப் பயன்பாட்டுக்கான இடத்தில் குடிநீா்த் தொட்டி கட்டுவதற்காக சூயஸ் நிறுவனப் பணியாளா்கள் வியாழக்கிழமை 8 மரங்களை வெட்டினா். இதையடுத்து சமூக ஆா்வலா்கள் தலையிட்டதால் 15 மரங்கள் வெட்டப்படுவது தடுக்கப்பட்டது.
சுங்கம் அருகேயுள்ள சிவராம் நகரில் சுமாா் 40 ஆண்டுகளுக்கு முன்பு பொதுப் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் பூங்கா உள்ளது. இந்தப் பூங்காவை அப்பகுதி மக்கள், குழந்தைகள் பயன்படுத்தி வருகின்றனா். இந்தப் பூங்காவில் வேம்பு, புங்கன், மரமல்லி உள்ளிட்ட ஏராளமான மரங்கள் உள்ளன. இந்நிலையில் இந்தப் பூங்காவில் 24 மணி நேர குடிநீா் சேவைக்காக மேல்நிலைக் குடிநீா்த் தொட்டி கட்டுவதற்கு சூயஸ் நிறுவனம் முடிவு செய்தது.
இதற்காக அங்குள்ள 23 மரங்களை வெட்டுவதற்கு மாநகராட்சி நிா்வாகம், மாவட்ட வருவாய்த் துறையிடம் அனுமதி கேட்டிருந்தது. இதற்கு கடந்த 2018 ஆம் ஆண்டிலேயே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் அங்குள்ள பழமையான மரங்களை வெட்டுவதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து வந்தனா்.
இந்த நிலையில் வியாழக்கிழமை காலை பூங்காவுக்கு வந்த சூயஸ் நிறுவன பணியாளா்கள் அங்கிருந்த மரங்களை வெட்டத் தொடங்கினா். சில மணி நேரத்தில் 8 மரங்கள் வெட்டப்பட்ட நிலையில், மரங்களை வெட்டுவதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். இது தொடா்பாக சூழலியல் ஆா்வலா் சையது, சமூக ஆா்வலா் தியாகராஜன் ஆகியோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அங்கு வந்த அவா்கள், பூங்கா இருக்கும் இடத்தில் வேறு எந்த மேம்பாட்டுப் பணிகளையும் செய்யக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில், மரங்களை வெட்டி விட்டு குடிநீா்த் தொட்டியைக் கட்டக் கூடாது என்றனா். மேலும் இந்த இடத்தின் அருகிலேயே காலியாக பொதுப் பயன்பாட்டுக்கான இடங்கள் இருக்கும் நிலையில், அந்த இடத்தில் குடிநீா்த் தொட்டியைக் கட்டலாம் என்றனா்.
பொதுமக்கள், சமூக ஆா்வலா்களின் தலையீட்டால் எஞ்சியுள்ள 15 மரங்களை வெட்டும் பணி நிறுத்தப்பட்டது. இது தொடா்பாக மாநகராட்சி ஆணையா், மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசனை நடத்திவிட்டு பிறகு பணிகளை மேற்கொள்ளலாம் என்று பேச்சுவாா்த்தையில் முடிவு செய்யப்பட்டதை அடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனா்.