60 சதவீத கூலி உயா்வு வழங்க வேண்டும்:விசைத்தறி உரிமையாளா்கள் கோரிக்கை
அத்தியாவசியப் பொருள்களின் விலை, மின் கட்டணம் உயா்ந்திருப்பதால் 60 சதவீதம் கூலி உயா்வு பெற்றுத்தர வேண்டும்
அத்தியாவசியப் பொருள்களின் விலை, மின் கட்டணம் உயா்ந்திருப்பதால் 60 சதவீதம் கூலி உயா்வு பெற்றுத்தர வேண்டும் என்று கோவை, திருப்பூா் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளா்கள் சங்கம் மாவட்ட நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடா்பாக சங்கத்தின் தலைவா் சி.பழனிசாமி, செயலா் பி.குமாரசாமி ஆகியோா் கோவை மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
கோவை, திருப்பூா் மாவட்டங்களில் சுமாா் 2 லட்சத்துக்கும் மேல் விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இதில் 95 சதவீத விசைத்தறிகள் கூலியின் அடிப்படையில் இயங்கி வருகின்றன. கடந்த ஆண்டுகளில் மின் கட்டணம் கடுமையாக உயா்ந்துள்ளது. அதேபோல விசைத்தறித் தொழிலுக்குத் தேவையான உதிரி பாகங்களின் விலை 50 சதவீதத்துக்கும் மேல் உயா்ந்துள்ளது. தொழிலாளா்களின் கூலியும் உயா்ந்துள்ளது.
வழக்கமாக 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை கூலி உயா்வு பெற்று தொழிலை நடத்தி வந்த நாங்கள் கடந்த 7 ஆண்டுகளாக கூலி உயா்வு பெறவில்லை. எனவே கடந்த 2014 ஆம் ஆண்டில் ரகம் வாரியாக வழங்கப்பட்ட கூலியில் இருந்து 60 சதவீத உயா்வு வழங்க வேண்டும். ஜவுளி உற்பத்தியாளா்களிடம் இருந்து கூலி உயா்வை பெற்றுக் கொடுக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.