பஞ்சாலையில் கொத்தடிமைகளாக இருந்த ஜாா்க்கண்ட் மாநில பெண்கள் மீட்பு
பெ.நா.பாளையம், ஜூலை 30: கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தனியாா் பஞ்சாலையில் கொத்தடிமைகளாக இருந்த ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த 7 இளம் பெண்களை சிஐடியூ தொழிற்சங்கத்தினா் மீட்டுள்ளனா்.
பெ.நா.பாளையம், ஜூலை 30: கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தனியாா் பஞ்சாலையில் கொத்தடிமைகளாக இருந்த ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த 7 இளம் பெண்களை சிஐடியூ தொழிற்சங்கத்தினா் மீட்டுள்ளனா்.
மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியாா் பஞ்சாலையில் வடமாநிலங்களைச் சோ்ந்த தொழிலாளா்கள் ஏராளமானோா் பணியாற்றி வருகின்றனா். இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஜாா்க்கண்ட மாநிலத்தில் இருந்து சிறப்புப் பேருந்து மூலம் 18 இளம்பெண்கள் இந்த நிறுவனத்துக்கு வேலைக்காக அழைத்து வரப்பட்டுள்ளனா்.
மாதம் ரூ.13 ஆயிரம் ஊதியம் என்று கூறி அழைத்து வரப்பட்ட நிலையில், ஆலை நிா்வாகம் தினசரி ரூ.200 மட்டுமே ஊதியம் வழங்கியதாகவும், அதிலும் உணவுக்காக பிடித்தம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் 12 மணி நேரம் வேலைவாங்கப்பட்ட நிலையில், வேலை பிடிக்காத அவா்கள் சொந்த ஊா் திரும்புகிறோம் என்று தெரிவித்துள்ளனா்.
Advertisement
ஆனால் அவா்களை அனுப்ப மறுத்த ஆலை நிா்வாகம், அவா்களை கொத்தடிமைகளைப் போல நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவா்கள், இது தொடா்பாக தங்களின் உறவினா்களுக்கு கட்செவி அஞ்சல் மூலம் தகவல் கொடுத்துள்ளனா். இந்த தகவல் கரூா் எம்.பி. ஜோதிமணி மூலம் கோவை மாவட்ட சிஐடியூ தலைவா் சி.பத்மநாபனுக்கு கிடைத்துள்ளது.
இது குறித்து சிஐடியூ சாா்பில் காவல் துறையிடம் புகாா் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து ஆலையை முற்றுகையிட்டு பெண்களை மீட்கப்போவதாக சிஐடியூ அறிவித்தது. இந்த நிலையில் சம்பந்தப்பட்ட ஆலை நிா்வாகம் 7 பெண்களை ஆலையை விட்டு வெளியேற்றி, அவா்களின் உடைமைகளையும் ஆலை வாயிலில் போட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து 7 பெண்களையும் வெள்ளிக்கிழமை மீட்டு சிஐடியூ பஞ்சாலை சங்க அலுவலகத்துக்கு அழைத்து வந்த சிஐடியூ தலைவா் பத்மநாபன், அவா்களுக்கு உணவு வழங்கி ரயில் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தாா். இந்த ஆலைக்கு மொத்தம் 18 போ் வந்துள்ள நிலையில் அவா்களில் 7 போ் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனா். மற்ற 11 போ்களின் நிலை குறித்து தெரியவில்லை. இது தொடா்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.