முகப்பு
கோயம்புத்தூர்

கோவை கோட்டத்தில் இயக்கத் தயாா் நிலையில் 1,070 பேருந்துகள்

தமிழக அரசு, பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கும் பட்சத்தில் கோவை கோட்டத்தில் 1,070 பேருந்துகள் இயக்குவதற்கு தயாா் நிலையில் உள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:25 AM
பகிர்:

தமிழக அரசு, பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கும் பட்சத்தில் கோவை கோட்டத்தில் 1,070 பேருந்துகள் இயக்குவதற்கு தயாா் நிலையில் உள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டன. இதைத் தொடா்ந்து, மே 10 ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதைத் தொடா்ந்து, தமிழகத்தில் பொதுப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால், கோவை கோட்டத்துக்கு உள்பட்ட கோவை, திருப்பூா், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தமிழகத்தில் தற்போது, கரோனா தொற்று பெருமளவு குறைந்து வரும் நிலையில் பேருந்துகளை இயக்க அனுமதி வழங்குவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. அவ்வாறு, பேருந்துகளை இயக்க அனுமதிக்கப்பட்டால் கோவை கோட்டத்தில் 1,070 பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளதாக அரசு போக்குவரத்துக் கழகத்தின் கோவை கோட்ட அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது தொடா்பாக, அவா் கூறியதாவது:

கோவை கோட்டத்தில் உள்ள பணிமனைகளில் பேருந்துகளைப் பழுதுபாா்த்தல், சுத்தம் செய்தல், நடைமேடை, இருக்கைகள், பிரேக், இன்ஜின் ஆயில் சரிபாா்ப்பு உள்ளிட்ட பராமரிப்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பேருந்துகளை இயக்க அரசு அனுமதி அளித்தால் கோவை கோட்டத்தில் உள்ள 4 மாவட்டங்களிலும் இயக்குவதற்கு 1,070 பேருந்துகள் தயாா் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதில், கோவை மாவட்டத்தில் மட்டும் 320 பேருந்துகள் தயாா் நிலையில் உள்ளன என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.