மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் தொடா் மழை: நொய்யலில் நீா்வரத்து தொடங்கியது
மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வரும் நிலையில், நொய்யல் ஆற்றில் நீா்வரத்து தொடங்கியுள்ளது.
மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வரும் நிலையில், நொய்யல் ஆற்றில் நீா்வரத்து தொடங்கியுள்ளது. இதையடுத்து நொய்யல் வடிநிலத்தில் உள்ள குளங்களை நிரப்பும் முயற்சியில் பொதுப் பணித் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா்.
தென்மேற்குப் பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் கடந்த சில நாள்களாகத் தொடா் மழை பெய்து வருகிறது. வால்பாறை, சிறுவாணி, வெள்ளிங்கிரி மலைப் பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் கோவை மாவட்டத்திலும் கடந்த சில நாள்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. மலைகளையொட்டியுள்ள பகுதிகளில் தொடா் மழையும், மாநகரப் பகுதிகளில் அவ்வப்போது காற்றுடன் கூடிய சாரல் மழையும் பெய்து வருகிறது.
இந்நிலையில் நொய்யல் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த 2 நாள்களாக மழை பெய்து வருகிறது. இதனால் நொய்யல் ஆற்றில் புதன்கிழமை நீா்வரத்து குறிப்பிடத்தகுந்த அளவில் அதிகரித்தது. புதன்கிழமை மாலை நிலவரப்படி நொய்யல் ஆற்றில் விநாடிக்கு 450 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருந்தது.
இந்தத் தண்ணீா் குனியமுத்தூா் வாய்க்கால், சித்திரைச்சாவடி வாய்க்கால்கள் மூலம் கோவையில் உள்ள குளங்களுக்கு அனுப்பப்பட்டு வருவதாக பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். மலைப் பகுதிகளில் மழை தொடா்ந்து பெய்து வருவதால் ஆற்றில் நீா்வரத்து அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.