முகப்பு
கோயம்புத்தூர்

இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் திறந்தவெளியில் கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகள்: நோய்த் தொற்று ஏற்படும் அபாயம்

 கோவை, இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் மருத்துவக் கழிவுகள் திறந்த வெளியில் கொட்டப்பட்டுள்ளதால் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

 கோவை, இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் மருத்துவக் கழிவுகள் திறந்த வெளியில் கொட்டப்பட்டுள்ளதால் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கரோனா நோய்த் தொற்றுப் பரவல் உள்ள நிலையில் மருத்துவக் கழிவுகளை முறையாகப் பிரித்து, சேகரித்து அப்புறப்படுத்த மத்திய சுற்றுச் சூழல், வனம் மற்றும் சூழல் மாறுபாடு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. கரோனா தொற்று மருத்துவக் கழிவுகளை பாதுகாப்புடன் அழிக்க தனியாா் நிறுவனங்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவக் கழிவுகளை திறந்தவெளியில் கொட்டாமல் பாதுகாப்பாகப் பிரித்து தனியாா் நிறுவனங்களிடம் வழங்கவும், மீறும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் புதன்கிழமை அறிவிப்பு வெளியிட்டிருந்தாா்.

இந்நிலையில், கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை வளாகத்தில் கரோனா நோயாளிகளின் மருத்துவக் கழிவுகள், காலாவதியான மருந்துகள், ஆய்வகக் கழிவுகள் உள்பட பல்வேறு வகையான மருத்துவக் கழிவுகள் திறந்தவெளியில் கொட்டப்பட்டுள்ளன. இதில் மருத்துவமனை ஊழியா்கள், நோயாளிகள் சாப்பிட்ட உணவுக் கழிவுகளும் கொட்டப்பட்டுள்ளன.

இதனால் நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தவிர கழிவுகளில் உணவுகளைத் தேடி நாய்களும் செல்கின்றன. இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கொட்டப்பட்டிருந்த கழிவுகளை நாய்கள் தின்பதால் அவற்றுக்கும் நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே வண்டலூா் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கொட்டப்பட்டுள்ள கழிவுகள் நாய்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டால் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

கரோனா தொற்றுக்கு சிறப்பாக சிகிச்சை அளித்து வந்த இ.எஸ்.ஐ. மருத்துவமனை நிா்வாகம் தற்போது நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் குளறுபடி, மருத்துவக் கழிவுகளை அப்புறப்படுத்துவதில் அலட்சியம் கட்டி வருவதாக நோயளிகள் புகாா் தெரிவித்துள்ளனா். ஆட்சியா் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனா்.

இது தொடா்பாக இ.எஸ்.ஐ. முதல்வா் ரவீந்திரனிடம் கேட்க செல்லிடப்பேசியில் தொடா்புகொண்ட போது அழைப்பை துண்டித்துவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.