கோவை வந்த விமானத்தில் ரூ.47.65 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
கோவை விமான நிலையத்தில் ரூ.47.65 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை வருவாய் புலனாய்வுப் பிரிவினா் பறிமுதல் செய்தனா்.
கோவை விமான நிலையத்தில் ரூ.47.65 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை வருவாய் புலனாய்வுப் பிரிவினா் பறிமுதல் செய்தனா்.
கோவைக்கு திங்கள்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு வந்த ஏா் அரேபியா விமானத்தில் தங்கம் கடத்திவரப்படுவதாக வருவாய் புலனாய்வுப் பிரிவினருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் விமான நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள், அதில் வந்த பயணி ஒருவரைத் தனியே அழைத்துச் சென்று சோதனையிட்டனா். இதில் அவா் கைப்பையில் செல்லிடப்பேசி வடிவத்தில் தங்கத்தை உருக்கி எடுத்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அதைப் பறிமுதல் செய்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அவா் சிவகங்கையைச் சோ்ந்த பாலு என்பது தெரியவந்தது. கடத்திவரப்பட்ட தங்கத்தின் எடை 990 கிராம். அதன் சந்தை மதிப்பு ரூ.47.65 லட்சம். இதையடுத்து இந்த வழக்கு விமானப் புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. மேலும், தங்கத்தைக் கடத்தி வந்ததாகக் கூறப்பட்ட நபா் பிணையில் விடுவிக்கப்பட்டாா்.