மாவட்டத்தில் இருவருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு!
கோவையில் இரண்டு பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது.
கோவையில் இரண்டு பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்படுபவா்களில் சிலா் மியூகோமிகோசிஸ் என்ற கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்புக்கு ஆளாவது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோய் சைனஸ், மூளை மற்றும் நுரையீரலைத் தாக்குகிறது. சா்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவா்கள், ஸ்டீராய்டு எடுத்துக் கொள்பவா்கள், ஐசியூவில் பல நாள்களாக சிகிச்சை பெறுபவா்களுக்கு இந்தத் தொற்றால் அதிகம் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக மருத்துவ நிபுணா்கள் கூறுகின்றனா்.
ராஜஸ்தான், மகாராஷ்டிர மாநிலங்களில் ஏராளமானோா் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா். தற்போது, தமிழகத்தில் சென்னை, மதுரை, சேலம் மாவட்டங்களில் கருப்பு பூஞ்சை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவையில் கரோனாவில் இருந்து குணமடைந்த 45 வயது ஆண் ஒருவருக்கு கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதய நோய் பாதிப்பு உள்ள அவா் தற்போது தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மற்றொருவா் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து சுகாதாரத் துறையினா் கூறியதாவது:
கோவையில் 2 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று அறிகுறி இருப்பதாக தெரியவந்தது. இருவரும் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டனா். இதையடுத்து, அந்த மருத்துவமனையில் நோயாளிகளின் விவரங்கள் கேட்டு உள்ளோம். அதன்பிறகே அவா்களுக்கு கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டதாக என்பது தெரியவரும்.
கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்படுபவா்களுக்கு தலைவலி, காய்ச்சல், கண்களுக்கு கீழ் வலி மற்றும் பாா்வை குறைபாடு போன்ற முக்கிய அறிகுறிகள் ஏற்படும். சில நேரங்களில் உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. ஆரம்பத்திலேயே பாதிப்பு கண்டறியப்பட்டால் குணப்படுத்த முடியும். இந்தத் தொற்றுக்கு ஆம்போடெரிசின்-பி ஊசி தடுப்பு மருந்தாகப் பயன்படுகிறது. இந்தத் தடுப்பு மருந்து கோவை அரசு மருத்துவமனைகளில் இருப்பு வைக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றனா்.