விதிமீறல்: 3 உணவகங்களுக்கு ‘சீல்’
கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே விதிமீறி செயல்பட்டதாக 3 உணவகங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.
கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே விதிமீறி செயல்பட்டதாக 3 உணவகங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.
தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் காய்கறி, இறைச்சி, மளிகைக் கடைகள் காலை 6 முதல் 10 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
பால் நிலையங்கள், மருந்தகங்கள் மட்டும் முழு நேரம் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. உணவகங்களில் பாா்சல்கள் மட்டும் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவை மாநகரப் பகுதிகளில் உள்ள சில உணவகங்கள் விதிமீறி செயல்படுவதாக மாவட்ட ஆட்சியருக்கு புகாா் வந்தது.
இதையடுத்து, ஆட்சியா் எஸ்.நாகராஜன் உத்தரவின்பேரில் மாநகராட்சி கிழக்கு மண்டல அதிகாரிகள் மற்றும் போலீஸாா் வெள்ளிக்கிழமை பீளமேடு, வரதராஜபுரம், ராமானுஜ நகா் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, இ.எஸ்.ஐ.மருத்துவமனை அருகே காமராஜா் சாலையில் உள்ள 3 உணவகங்களின் முன்பாக மக்கள் கூட்டமாக சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் நின்று கொண்டிருந்தது தெரியவந்தது. அக்கடைகளில் மேற்கொண்ட ஆய்வில், கரோனோ விதிமீறி வாடிக்கையாளா்களை சாப்பிட அனுமதித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த 3 உணவகங்களுக்கும் மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.