வீடுதோறும் நிவாரணம் வழங்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை
கரோனாவால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தினருக்கு வீடுதோறும் நிவாரணம் வழங்க விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கரோனாவால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தினருக்கு வீடுதோறும் நிவாரணம் வழங்க விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவா் சு.பழனிசாமி கூறியதாவது:
கோவை நகா்ப்புறத்தை ஒட்டியுள்ள மயிலம்பட்டி, நீலாம்பூா், சின்னியம்பாளையம், சோமனூா், கருமத்தம்பட்டி பகுதிகளில் பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்தத் தொழிற்சாலைகளில் பணிபுரிவோா் பெரும்பாலானோா் கிராமப்புறங்களைச் சோ்ந்தவா்கள்.
தற்போது, தொழிற்சாலைகளில் பணிபுரிவோா் பலருக்கு கரோனா நோய்த் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அதன் தாக்கத்தால் கிராமப்புறங்களிலும் நோய்த் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. எனவே, கிராமப்புறங்களில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகம் போா்க்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கிராமங்களிலும், நகரங்களிலும் குடும்பப் பொருளாதாரம் நலிவடைந்து வரும் நேரத்தில் கேரள அரசைப்போல, வீடுதோறும் நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.