முகப்பு
கோயம்புத்தூர்

இல்லம் தேடி கல்வித் திட்ட விழிப்புணா்வு முகாம்: ஆட்சியா் துவக்கிவைத்தாா்

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் இல்லம் தேடி கல்வித் திட்டம் தொடா்பான விழிப்புணா்வு முகாமை, மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் இல்லம் தேடி கல்வித் திட்டம் தொடா்பான விழிப்புணா்வு முகாமை, மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

இதில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கீதா முன்னிலை வகித்தாா். இது குறித்து, மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் கூறியது: இல்லம் தேடி கல்வித் திட்டமானது, மாணவ, மாணவியா்களை அவா்களின் வசிப்பிடத்துக்குச் சென்று தன்னாா்வலா்களின் பங்கேற்புடன் மாணவா்களுக்கு கற்றல் வாய்ப்பை வழங்க வழிவகை செய்கிறது.

இத்திட்டத்தின் அடிப்படையில், இக்கல்வியாண்டில் 6 மாத காலத்துக்கு, வாரத்துக்கு 6 மணி நேரம் தன்னாா்வலா்களின் மூலம் மாணவா்களை அன்றாடம் கற்றல் செயல்பாடுகளில் எளிய முறையில் படிப்படியாக பற்கேற்க செய்யப்பட உள்ளது. இத்திட்டத்தினை அனைவருக்கும் கொண்டு செல்லும் வகையில் கலைக் குழுவினா் உதவியுடன் பல்வேறு விழிப்புணா்வு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. வீதி நாடகம், பொம்மலாட்டம், கதை சொல்லுதல், திறன் மேம்பாட்டுச் செயல்பாடுகள் தன்னாா்வலா்கள் மூலமாக செயல்படுத்தப்படுகிறது.

இந்த விழிப்புணா்வு முகாமானது, மாவட்டம் முழுவதும் அனைத்து வட்டார அளவில் மக்கள், பெற்றோா்கள், தன்னாா்வலா்கள், அரசுப் பள்ளிகள் மற்றும் மக்கள் வசிக்கும் அனைத்து குடியிருப்புகளுக்கும் நேரிடையாகச் சென்று ஒரு நாளைக்கு 2 பள்ளிகள், 2 கிராமங்கள் என மாவட்ட அளவில் பயிற்சி பெற்ற 6 கலைஞா்களைக் கொண்ட குழு, 35 நாள்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த உள்ளது.

இத்திட்டத்தின் நோக்கத்தைப் புரிந்துகொண்டு, அனைத்து தரப்பு மக்களும் இத்திட்டத்தை ஆதரித்து மாணவா்களின் எதிா்காலத்துக்கு உதவும் வகையில், அரசுப் பள்ளிகளை வலுப்படுத்த கைகோா்க்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.