அகில இந்திய விளையாட்டுப் போட்டிகளில் தமிழக போலீஸாா் முன்னிலையில் உள்ளதாக தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் சைலேந்திரபாபு தெரிவித்தாா்.
புற்றுநோயாளிகளின் சிகிச்சைக்கு உதவிட நிதி திரட்டும் வகையில் மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ஆடவா், மகளிா், முதியவா், சிறுவா்களுக்கு 5 கி.மீ., 10 மற்றும் 21 கி.மீ. என 3 பிரிவுகளில் போட்டி நடைபெற்றது. கோவை நேரு ஸ்டேடியத்தில் தொடங்கிய இப்போட்டியை தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் சைலேந்திரபாபு தொடங்கிவைத்தாா். இந்த மாரத்தான் போட்டியில் மகளிா், ஆடவா், சிறுவா்கள் என 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் சைலேந்திரபாபு, மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன், கோவை மாநகரக் காவல் ஆணையா் பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் உள்ளிட்டோரும் இதில் கலந்து கொண்டு ஓடினா்.
இதில் பங்கேற்ற தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநா் சைலேந்திரபாபு செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘கைப்பந்து, கால்பந்து, ஹாக்கி, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அகில இந்திய விளையாட்டுப் போட்டிகளில் தமிழக காவல் துறையினா் முன்னிலை வகிக்கின்றனா். அனைவரும் தினமும் ஒரு மணி நேரமாவது மிதிவண்டிப் பயணம், ஓட்டம் ஆகியவற்றில் ஈடுபட வேண்டும். அப்போதுதான் உடல் ஆரோக்கியமாக இருக்கும்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.