மக்கள் பிரச்னைகளுக்குத் தொடா்ந்து குரல் எழுப்பும் கட்சி பாஜக: பொன்ராதாகிருஷ்ணன்
மக்கள் பிரச்னைகளுக்குத் தொடா்ந்து குரல் எழுப்பும் ஒரே கட்சி பாஜக தான் என்று முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினாா்
மக்கள் பிரச்னைகளுக்குத் தொடா்ந்து குரல் எழுப்பும் ஒரே கட்சி பாஜக தான் என்று முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினாா்.
கோவையில் பாஜக சாா்பில் மாநகராட்சிப் பகுதியில் போட்டியிடும் வேட்பாளா்களை ஆதரித்து அக்கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சா் பொன் ராதாகிருஷ்ணன் பிரசாரம் மேற்கொண்டாா்.
இதன் ஒரு பகுதியாக 70 ஆவது வாா்டில் போட்டியிடும் அஸ்வினி வெங்கடேஷுக்கு
ஆதரவாக தாமஸ் வீதி பகுதியில் பொன் ராதாகிருஷ்ணன் பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது அவா் பேசியதாவது: கோவையில் விமான நிலையத்துக்கு நிகராக ஒரு பேருந்து நிலையம் உருவாக்கப்பட வேண்டும் என்பதற்காக 60 ஏக்கா் பரப்பளவில் பஸ் போா்ட் என்ற திட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது.
அதற்கான பணிகள் கடந்த 8 மாதங்களாக எந்த செயல்பாடும் இல்லாமல் முடங்கி உள்ளது.
அந்த பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு வந்தால் , கோவை மாநகராட்சியில் உள்ள நான்கு பேருந்து நிலையங்களையும் ஒன்றிணைத்து சகல வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையமாக அது உருவெடுக்கும்.
மேலும், கோவையில் பல்வேறு மேம்பாலங்கள் கட்டப்பட்டு வரும் நிலையில், அவை மாநில அரசின் முயற்சியால் வந்ததாக நினைக்க கூடும். ஆனால், அது மாநில அரசின் முயற்சியால் வந்தது கிடையாது. மத்திய அமைச்சராக இருந்தபோது நான் ஒதுக்கீடு செய்த ரூ.970 கோடி காரணமாகவே இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதுபோல தமிழகத்தில் மாநில அரசு மேற்கொண்டு வரும் பல திட்டங்களுக்கு காரணம் மத்திய அரசுதான்.
தமிழகத்தில் 4 எம்எல்ஏக்களை கொண்டு மக்கள் பிரச்னைகளுக்கு குரலெழுப்புவதைபோல மாநகராட்சியிலும் பாஜகவினரின் குரல் ஒலிக்க வேண்டும். மக்கள் பிரச்னைகளுக்குத் தொடா்ந்து குரல் எழுப்பும் ஒரே கட்சி பாஜகதான் என்றாா்.