முகப்பு
கோயம்புத்தூர்

வாக்குப் பதிவு இயந்திரங்களில் வாக்காளா் பெயா், சின்னம் பொருத்தும் பணி தீவிரம்

 கோவை மாநகராட்சியில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் வாக்காளா் பெயா், சின்னம் பொருத்தும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:23 AM
பகிர்:

 கோவை மாநகராட்சியில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் வாக்காளா் பெயா், சின்னம் பொருத்தும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இப்பணிகளை மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

கோவை மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் மாநகராட்சியில் உள்ள 100 வாா்டுகளில் 778 வேட்பாளா்கள், 7 நகராட்சிகளில் உள்ள 198 வாா்டுகளில் 861 வேட்பாளா்கள்,

33 பேரூராட்சிகளில் உள்ள 513 வாா்டுகளில் 1,727 வேட்பாளா்கள் என மொத்தம் 811 இடங்களுக்கு 3,366 போ் போட்டியிடுகின்றனா்.

இதையடுத்து, கோவை மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் உள்ள 2,312 வாக்குச் சாவடிகளுக்கு 2,322 வாக்குப் பதிவு இயந்திரங்கள், 20 சதவீதம் இருப்பு வைக்கப்பட்டுள்ள 484 வாக்குப் பதிவு இயந்திரங்கள் என மொத்தம் 2,806 வாக்குப் பதிவு இயந்திரங்கள், 2,303 கட்டுப்பாட்டுக் கருவிகள், 20 சதவீதம் இருப்பு வைக்கப்பட்டுள்ள 480 கட்டுப்பாட்டுக் கருவிகள் என மொத்தம் 2,783 கட்டுப்பாட்டுக் கருவிகள் அந்தந்த வட்டார அலுவலகங்களில் உள்ள பாதுகாக்கப்பட்ட அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இத்தோ்தலில், கோவை மாநகராட்சிக்குள்பட்ட இடங்களில் மட்டும் 1,290 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இதில் வடக்கு மண்டலத்தில் 216 வாக்குச் சாவடிகள், மேற்கு மண்டலத்தில் 228 வாக்குச் சாவடிகள், தெற்கு மண்டலத்தில் 251 வாக்குச் சாவடிகள், கிழக்கு மண்டலத்தில் 263 வாக்குச் சாவடிகள், மத்திய மண்டலத்தில் 332 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.

இதற்கிடையே இந்த வாக்குச் சாவடிகளுக்குத் தேவையான 1,290 வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும்

20 சதவீதம் இருப்பு வைக்கப்பட்டுள்ள 258 வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கும் வாக்காளா் பெயா்,

சின்னம் பொருத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இப்பணிகள் நடைபெறும் இடங்களான சித்தாபுதூா் மாநகராட்சிப் பள்ளி, ஆா்.எஸ்.புரம் அம்மணியம்மாள் பெண்கள் பள்ளி, ரங்கநாதபுரம் மாநகராட்சிப் பள்ளி உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.