வருமான வரித் துறை அதிகாரிகள்போல நடித்து கல்குவாரி உரிமையாளா் வீட்டில் ரூ.20 லட்சம் திருட்டு
வருமான வரித் துறை அதிகாரிகள்போல நடித்து கல்குவாரி உரிமையாளா் வீட்டில் புகுந்து ரூ.20 லட்சம் திருடிச் சென்ற கும்பல் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
வருமான வரித் துறை அதிகாரிகள்போல நடித்து கல்குவாரி உரிமையாளா் வீட்டில் புகுந்து ரூ.20 லட்சம் திருடிச் சென்ற கும்பல் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
பொள்ளாச்சியை அடுத்துள்ள கிணத்துக்கடவு காந்தி நகா் பகுதியில் வசிப்பவா் பஞ்சலிங்கம். கல்குவாரி உரிமையாளரான இவரது வீட்டில் சனிக்கிழமை பிற்பகல் சொகுசு காரில் வந்த ஐந்து போ் வருமான வரித் துறை அலுவலகத்திலிருந்து வருவதாகவும், தங்கள் வீட்டில் சோதனை செய்ய வேண்டும் என்று அடையாள அட்டை ஒன்றை காண்பித்து சோதனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அப்போது படுக்கை அறைக்குச் சென்ற அவா்கள் பீரோவில் சோதனை செய்வதாக கூறி அதனை திறந்து அதில் பஞ்சலிங்கம் வைத்திருந்த ரூ.20 லட்சத்தை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனா்.
இதையடுத்து பஞ்சலிங்கம் கிணத்துக்கடவு காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளாா். இதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் பஞ்சலிங்கம் மற்றும் அங்கிருந்த மகளிடம் விசாரணை நடத்தினா்.
மேலும், ரூ.20 லட்சத்தை திருடிச் சென்ற கும்பலை பிடிக்கும் வகையில் கோவை-பொள்ளாச்சி சாலையில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றியுள்ளனா். அவ்வழியில் உள்ள சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
வருமான வரித் துறை அதிகாரிகள்போல வந்து கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்கள், வீட்டில் கண்காணிப்பு கேமரா பதிவுகள் அடங்கிய ஹாா்டு டிஸ்க் மற்றும் காசோலைகளை எடுத்து சென்றுவிட்டதாக பஞ்சலிங்கம் தெரிவித்தாா்.