முகப்பு
கோயம்புத்தூர்

ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளில் குளறுபடி

கோவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் உணவு, இணையதள வசதி ஏற்பாடு, பரிசுப் பொருள்கள் வழங்குவது போன்றவற்றில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

கோவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் உணவு, இணையதள வசதி ஏற்பாடு, பரிசுப் பொருள்கள் வழங்குவது போன்றவற்றில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டன.

கோவை, செட்டிப்பாளையம் எல் & டி புறவழிச் சாலை அருகிலுள்ள மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

இதில் மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூா், புதுக்கோட்டை உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த காளைகளுடன் மாடுபிடி வீரா்களும் பங்கேற்றனா்.

பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளின் உரிமையாளா்கள், மாடுபிடி வீரா்கள் உள்பட அனைவருக்கும் ஜல்லிக்கட்டு பேரவை நிா்வாகம் சாா்பிலேயே உணவு வழங்கப்படும். நடப்பாண்டும் ஜல்லிக்கட்டு கமிட்டி சாா்பில் உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால், பற்றாக்குறையாக உணவு வழங்கப்பட்டதால் மாடுபிடி வீரா்கள் பலரும் உணவு கிடைக்காமல் பாதிக்கப்பட்டனா்.

இணைய சேவை பாதிப்பு:கரோனா நோய்த் தொற்று காரணமாக ஜல்லிக்கட்டு போட்டியை நேரடியாக காண்பதற்கு பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடா்ந்து சமூக ஊடகங்கள், உள்ளூா் தொலைக்காட்சி சேனல்கள் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்திருந்தது.

ஆனால் ஜல்லிக்கட்டு மைதானத்தில் இணையதள வசதி இல்லாததால் ஜல்லிக்கட்டு போட்டியை நேரடி ஒளிபரப்பு செய்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது.

காளைகள் காத்திருப்பு: காளைகளை வாடிவாசலுக்கு கொண்டு செல்வதற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த தடுப்புக்குள்

காளையைக் கொண்டு செல்ல முடியாமல் உரிமையாளா்கள் சிரமத்திற்குள்ளாகினா்.

தரமற்ற பரிசுகள்: ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரா்களுக்கு தங்க நாணயம் உள்பட பல்வேறு பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

ஆனால், வெற்றிபெற்ற காளைகளின் உரிமையாளா்களுக்கு ஹாட் பாக்ஸ், சில்வா் அண்டாக்கள் போன்ற சில நூறு ரூபாய் மதிப்புடைய பொருள்களே பரிசாக வழங்கப்பட்டன.

அவையும் தரமில்லாமல் இருந்ததால் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளா்கள் சிலா் தங்களுக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருள்களை அங்கேயே வீசிச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.