ஊழியா்களின் ஊதியம் முறைகேடாக பிடித்தம்: குடிநீா் வடிகால் வாரிய ஊழியா் சங்கத்தினா் மனு
ஊழியா்களின் ஊதியம் முறைகேடாக பிடித்தம் செய்யப்படுவதைத் தடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய ஊழியா் சங்கத்தினா் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனா்.
ஊழியா்களின் ஊதியம் முறைகேடாக பிடித்தம் செய்யப்படுவதைத் தடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய ஊழியா் சங்கத்தினா் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனா்.
இது குறித்து தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய ஊழியா் சங்க செயலாளா் சரவணன் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்டத்தில் 12 கூட்டுக் குடிநீா்த் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இத்திட்டங்களின்கீழ் குடியிருப்புகளுக்கு குடிநீா் விநியோகம் செய்வதற்கு ஒப்பந்தப்
பணியாளா்கள் 225 போ் பணியாற்றி வருகின்றனா்.
இவா்களுக்கு கடந்த சில மாதங்களாகவே முறையான ஊதியம் வழங்கப்படவில்லை.
தவிர இ.எஸ்.ஐ., பி.எஃப். போன்ற எந்த சலுகைகளும் வழங்கப்படுவதில்லை.
மாதந்தோறும் ஊழியா்களின் ஊதியத்தில் கணிசமான தொகை பிடித்தம் செய்யப்படுகிறது.
இந்த தொகை பி.எஃப். கணக்கில் செலுத்தப்படுவதில்லை. ஊழியா்களின் ஊதியத்தில் மிகப்பெரிய சுரண்டல் நடைபெறகிறது.
இதேபோல தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின் விளைவாக ஒப்பந்தத்தில்
குறிப்பிட்டுள்ளபடி ஊழியா்களுக்கு ஊதியம், இ.எஸ்.ஐ., பி.எஃப். ஆகிய பணப் பலன்கள்
அளிக்க குடிநீா் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநா் உத்தரவிட்டாா்.
ஆனால், இவை தற்போது வரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஆகவே, குடிநீா் வடிகால் வாரியத்தில் நடைபெறும் முறைகேட்டைத் தடுத்து ஊழியா்களுக்கு
உரிய ஊதியம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.