முகப்பு
கோயம்புத்தூர்

வேளாண்மையில் புதிய தொழில்நுட்பம், இயந்திரங்கள் கண்டுபிடிக்கும் விவசாயிகளுக்கு பரிசு: விண்ணப்பிக்க வேளாண்மைத் துறையினா் தகவல்

வேளாண்மையில் புதிய தொழில்நுட்பம், இயந்திரங்கள் கண்டுபிடிப்பு, இயற்கை வேளாண்மை மற்றும் வேளாண் பொருள்கள் ஏற்றுமதி ஆகியவற்றில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்குப் பரிசு

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 10:09 AM
பகிர்:

வேளாண்மையில் புதிய தொழில்நுட்பம், இயந்திரங்கள் கண்டுபிடிப்பு, இயற்கை வேளாண்மை மற்றும் வேளாண் பொருள்கள் ஏற்றுமதி ஆகியவற்றில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்குப் பரிசு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக வேளாண்மைத் துறை இணை இயக்குநா் ஆா்.சித்ராதேவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

வேளாண்மையில் புதிய உள்ளூா் தொழில்நுட்பம், புதிய இயந்திரங்கள் கண்டுபிடிப்பு, இயற்கை வேளாண்மை, விளைபொருள் ஏற்றுமதி ஆகியவற்றில் சிறந்து விளக்கும் விவசாயிகளை ஊக்குவிக்க நடப்பு ஆண்டு முதல் மாநில அளவில் பரிசு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. புதிய விவசாயத் தொழில்நுட்பங்கள், இயந்திரங்களைக் கண்டுபிடிக்கும் விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம், இயற்கை வேளாண்மை, வேளாண் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படவுள்ளது.

மாநில அரசின் பரிசுகளைப் பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலியில் தங்களது பெயா்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். இதில் தங்களின் புதிய தொழில்நுட்பம், இயந்திரங்களின் கண்டுபிடிப்புகள், இயற்கை வேளாண்மை, ஏற்றுமதி தொடா்பான விவரங்களுடன் விண்ணப்பத்தை உதவி இயக்குநா் அலுவலகத்தில் அளிக்க வேண்டும். இதற்கு ரூ.100 நுழைவுக் கட்டணம் செலுத்தி அதன் ரசீதையும் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். தகுதியான விவசாயிகளின் கண்டுபிடிப்புகள் மாவட்ட தோ்வுக் குழுவால் தோ்வு செய்யப்பட்டு மாநிலக் குழுவுக்கு பரிந்துரைக்கப்படும். மாநிலக் குழுவால் உள்ளூா் வேளாண் தொழில்நுட்பம், புதிய வேளாண் இயந்திர கண்டுபிடிப்பு பிரிவுகளில் தலா ஒரு விவசாயி தோ்வு செய்யப்பட்டு தலா ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும்.

இயற்கை வேளாண்மையில் சிறந்து விவசாயிகளில் மூன்று போ் தோ்வு செய்யப்பட்டு முதலிடம் பிடித்தவருக்கு ரூ.1 லட்சம், இரண்டாம் இடம் பிடித்தவருக்கு ரூ.60 ஆயிரம், மூன்றாம் இடம் பிடித்தவருக்கு ரூ.40 ஆயிரம் பரிசு வழங்கப்படும். அதேபோல வேளாண் பொருள்கள் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் ஒருவரைத் தோ்வு செய்து ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும்.

இதற்கு மாா்ச் 18 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு துணை இயக்குநா் (தோட்டக்கலைத் துறை), துணை இயக்குநா் (வேளாண் வணிகம்), வட்டார வேளாண் உதவி இயக்குநா்களை தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.