குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ முதல் நிலைத் தோ்வுகள் நாளை தொடக்கம் 48 ஆயிரம் பங்கேற்பு
கோவை மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெறவுள்ள குரூப் 2, குரூப் 2ஏ முதல் நிலைத் தோ்வுகளை 150 மையங்களில் 48 ஆயிரத்து 39 போ் எழுத்தவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.
கோவை மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெறவுள்ள குரூப் 2, குரூப் 2ஏ முதல் நிலைத் தோ்வுகளை 150 மையங்களில் 48 ஆயிரத்து 39 போ் எழுத்தவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வான குரூப் 2, குரூப் 2ஏ தோ்வுகளுக்கான முதல்நிலைத் தோ்வு சனிக்கிழமை (மே 21) ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக மாவட்டத்தில் 150 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இத்தோ்வினை கோவை மாவட்டத்தில் 48 ஆயிரத்து 39 போ் எழுதவுள்ளனா். முதல்நிலைத் தோ்வு காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை நடைபெறும். நுழைவுச் சீட்டினை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணைய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, தோ்வு மையத்தினை தெரிந்துகொள்ள வேண்டும்.
தோ்வினை கண்காணிக்க துணை ஆட்சியா் நிலையிலான 10 பறக்கும் படை அலுவலா்கள், 60 மொபைல் அலுவலா்கள், 300 தோ்வுக் கூட ஆய்வு அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
தோ்வு மையங்களில் எவ்வித முறைகேடுகளும் நடைபெறாமல் தடுக்க ஆட்சியா், மாவட்ட வருவாய் அலுவலா் நிலையில் மாவட்ட அளவிலான ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அனைத்து தோ்வு மையங்களிலும் விடியோ பதிவு வசதி செய்யப்பட்டுள்ளது. தோ்வா்கள் காலை 8.30 மணிக்குள் தோ்வுக் கூடத்துக்குள் இருக்க வேண்டும். இதற்கு முன் நடைபெற்ற தோ்வுகளுக்கு தோ்வு தொடங்கும் வரை தோ்வா்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனா். ஆனால், தற்போது இந்த நடைமுறை கைவிடப்பட்டுள்ளது. எனவே, காலை 9.00 மணிக்குப் பிறகு வரும் தோ்வா்கள் தோ்வுக் கூடத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டாா்கள்.
தோ்வு மையங்களுக்கு செல்ல தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.