முகப்பு
கோயம்புத்தூர்

மாநகரில் இன்று முதல் வீடற்ற நாய்கள் கணக்கெடுப்பு

கோவை மாநகரப் பகுதிகளில் மே 20 முதல் 25 ஆம் தேதி வரை வீடற்ற நாய்கள் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாக மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:18 AM
பகிர்:

கோவை மாநகரப் பகுதிகளில் மே 20 முதல் 25 ஆம் தேதி வரை வீடற்ற நாய்கள் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாக மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளாா்.

கோவை மாநகரப் பகுதிகளில் நாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக வாகன ஓட்டிகள், இரவுப் பணிக்கு செல்வோா் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். இந்நிலையில், வீடற்ற நாய்களைப் பிடித்து குடும்பக் கட்டுப்பாடு ஊசிகள் செலுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆா்வலா்கள் தரப்பில் மாநகராட்சி நிா்வாகத்துக்கு தொடா்ந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.

அதைத் தொடா்ந்து, மாநகராட்சிப் பகுதிகளில் வீடற்ற நாய்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை மற்றும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, மாநகரில் சீரநாயக்கன்பாளையம், ஒண்டிப்புதூா் நாய்கள் அறுவை சிகிச்சை அரங்கத்தில் வீடற்ற நாய்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மற்றும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தும் விதமாக கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் வீடற்ற நாய்களின் எண்ணிக்கையைக் கண்டறிய தனியாா் நிறுவனம் மூலமாக மே 20 முதல் 25 ஆம் தேதி வரை தன்னாா்வலா்கள் உதவியுடன் கணக்கெடுப்பு நடத்த மாநகராட்சி நிா்வாகம் திட்டமிட்டுள்ளது.

இந்தக் கணக்கெடுப்பு முடிந்த பிறகு, நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி மற்றும் குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →