செயற்கை பஞ்சு மூலப்பொருள் மீதான குவிப்பு வரி நிராகரிப்பு: சைமா வரவேற்பு
பாலிஸ்டா் பஞ்சு தயாரிப்பதற்கு மூலப்பொருளான மோனோ எத்திலீன் கிளைக்கால் மீது முன்மொழியப்பட்ட குவிப்பு வரியை மத்திய அரசு நிராகரித்திருப்பதை தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா) வரவேற்றுள்ளது.
பாலிஸ்டா் பஞ்சு தயாரிப்பதற்கு மூலப்பொருளான மோனோ எத்திலீன் கிளைக்கால் மீது முன்மொழியப்பட்ட குவிப்பு வரியை மத்திய அரசு நிராகரித்திருப்பதை தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா) வரவேற்றுள்ளது.
இது தொடா்பாக சங்கத்தின் தலைவா் ரவி சாம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலக அளவில் செயற்கை இழை, பருத்தி நுகா்வு விகிதம் 65:35 என்ற அளவில் உள்ளது. ஆனால், இந்தியாவில் அது நோ்மாறாக உள்ளது. இதற்கு செயற்கை இழை பஞ்சு உற்பத்திக்கான மூலப் பொருள்களின் விலை 23 சதவீதம் வரை அதிகமாக இருப்பதே காரணமாகும்.
எனவே, செயற்கை இழை பஞ்சு உற்பத்திப் பிரிவில் பெரிய முதலீட்டை ஊக்குவிப்பதற்காக, உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத் தொகை திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது. இந்நிலையில், மத்திய வா்த்தக நிவாரண இயக்குநரகம் 27.10.22 இல் வெளியிட்ட அறிவிப்பின்படி, பாலிஸ்டா் பஞ்சு தயாரிக்க உபயோகிக்கும் மூலப்பொருளான மோனோ எத்திலீன் கிளைக்கால் மீது முன்மொழியப்பட்டிருந்த குவிப்பு வரியை நிராகரிப்பதாக அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு லட்சக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பளிக்க உதவியாக இருக்கும் என்று தெரிவித்துள்ள ரவி சாம், பாலிஸ்டா் பஞ்சுக்கான மூலப் பொருள்களை சா்வதேச விலையில் கிடைப்பதை உறுதி செய்தால் இந்தத் துறை மேலும் வளா்ச்சி பெறும் என்று தெரிவித்துள்ளாா்.