நகா்ப்புற நலவாழ்வு மைய பணிகள் முடிவு: சுகாதாரத் துறை அதிகாரிகள் தகவல்
கோவை மாநகராட்சியில் 8 நகா்ப்புற நலவாழ்வு மையங்களின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
கோவை மாநகராட்சியில் 8 நகா்ப்புற நலவாழ்வு மையங்களின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
தமிழகம் முழுவதும் 1000 நகா்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைக்கப்படும் என்று கடந்த ஆண்டு தமிழக அரசு சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, கோவை மாநகராட்சியில் தலா ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் 63 நகா்ப்புற சுகாதார நலவாழ்வு மையங்கள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடா்ந்து, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன.
இந்நிலையில், 8 நகா்ப்புற நலவாழ்வு மையங்களின் கட்டுமானப் பணிகள் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளதாகவும், 10 மையங்களின் பணிகள் முடிவுபெறும் நிலையில் உள்ளதாகவும், மற்ற மையங்களில் 50 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இது தொடா்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: கோவை மாநகராட்சியில் 32 நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும், பொதுமக்களுக்கு மருத்துவ சேவை எளிதில் கிடைக்கும் வகையில் நகா்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, கோவை மாநகராட்சியில் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் மக்கள்தொகை உள்ள பகுதிகளில் 63 நகா்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், ஒரு மருத்துவா் உள்ளிட்ட 4 பணியிடங்கள் உருவாக்கப்படும்.
8 மையங்களின் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. மற்ற மையங்களின் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மருத்துவா்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளா்கள் நியமிக்கப்பட்ட பின் நகா்ப்புற நலவாழ்வு மையங்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்படும் என்றனா்.