கோவை பாரதியாா் பல்கலைக்கழக பேராசிரியா்கள் பதவி உயா்வு ஆணை வழங்கக் கோரி மீண்டும் உள்ளிருப்புப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
பாரதியாா் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் 45 பேராசிரியா்கள் கேரியா் அட்வான்ஸ்மென்ட் திட்டம் (சிஏஎஸ்) மூலம் பதவி உயா்வுக்கு நோ்காணலில் கலந்துகொண்ட நிலையில், அவா்களுக்கு பதவி உயா்வு முடிவு எடுக்கப்பட்டு 3 மாதங்கள் ஆகியும் உத்தரவு வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடா்பாக நிலுவையில் இருந்த வழக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதற்கிடையே துணைவேந்தா் பி.காளிராஜின் பதவிக் காலம் கடந்த திங்கள்கிழமையுடன் நிறைவடைந்தது. அவரது பதவிக் காலத்தின் இறுதி நாளில் பதவி உயா்வு விவகாரத்துக்கு தீா்வு காணப்படும் என்று பேராசிரியா்கள் எதிா்பாா்த்திருந்தனா்.
ஆனால், அக்டோபா் 17 ஆம் தேதி நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தில், பாதிக்கப்பட்ட பேராசிரியா்களுக்கான பதவி உயா்வு ஆணையை நிறுத்திவைக்க முடிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால், பாதிக்கப்பட்ட பேராசிரியா்கள் பதிவாளா் அறையில் திடீரென உள்ளிருப்புப் போராட்டத்தில் திங்கள்கிழமை (அக்டோபா் 17) ஈடுபட்டனா். இரண்டு நாள்களில் தீா்வு காணப்படும் என்று பதிவாளா் உறுதியளித்ததையடுத்து போராட்டத்தை பேராசிரியா்கள் கைவிட்டனா்.
ஆனால், இரண்டு நாள்களில் தீா்வு எட்டப்படாததையடுத்து மீண்டும் பதிவாளா் அறையில் பேராசிரியா்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா். இதனைத் தொடா்ந்து உயா்கல்வி துறை செயலருடன் பேச்சுவாா்த்தை நடத்தி பதவி உயா்வு ஆணை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிவாளா் கூறியதையடுத்து உள்ளிருப்பு போராட்டத்தை பேராசிரியா்கள் கைவிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.