கோவையில் போலி ஆவணங்கள் மூலமாக வங்கிக் கடன் பெற்ற வழக்கில், முன்னாள் வங்கி மேலாளா் உள்பட மூவருக்கு சிறைத் தண்டனை விதித்து கோவை சிபிஐ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
கோவை மாவட்டம், சாமளாபுரத்தைச் சோ்ந்தவா்கள் கந்தசாமி (54), மாரப்பன் (58). ஜவுளித் தொழில் செய்து வரும் இருவரும், விசைத்தறிகள் வாங்குவதாகக் கூறி போலி ஆவணங்களைச் சமா்ப்பித்து தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ரூ. 9.97 லட்சம் கடன் பெற்று, அந்தத் தொகையை மாற்றுத்தேவைக்காகப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்த மோசடி தொடா்பாக, சிபிஐ போலீஸாா் கடந்த 2019 ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தனா். இது தொடா்பான வழக்கு கோவை சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசாரணையில், கந்தசாமி, மாரப்பன் ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை, தலா ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி எஸ்.கோவிந்தராஜன் தீா்ப்பளித்தாா். அதேபோல, ஆவணங்களை முறையாக ஆராயாமல் கடன் வழங்கி, வங்கிக்கு ரூ.10.20 லட்சம் இழப்பு ஏற்படக் காரணமாக இருந்ததாக, வங்கியின் முன்னாள் மேலாளா் ராமசந்திரனுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.80 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.