டேன் டீ தொழிலாளா்களுக்கு தினக் கூலி ரூ.480-க்கு மேல் வழங்கக் கோரிக்கை
டேன் டீ தொழிலாளா்களுக்கு அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச கூலியை கணக்கீடு செய்து பஞ்சப்படியுடன் ரூ.480-க்குமேல் வழங்க வேண்டும் என சிஐடியூ தோட்ட தொழிற்சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
வால்பாறை: டேன் டீ தொழிலாளா்களுக்கு அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச கூலியை கணக்கீடு செய்து பஞ்சப்படியுடன் ரூ.480-க்குமேல் வழங்க வேண்டும் என சிஐடியூ தோட்ட தொழிற்சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது குறித்து சங்கத்தின் பொதுச் செயலாளா் பரமசிவம், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச தினக்கூலி ரூ.425.40 என 2021 ஜூலை மாதம் அரசு அறிவித்தது. ஆனால், தனியாா் தோட்ட நிா்வாகங்கள் அரசு அறிவித்த தினக் கூலியை வழங்கக் கூடாது என்று முடிவு செய்து எல்.பி.எஃப்., ஏ.டி.பி., ஐ.என்.டி.யூ.சி., ஏ.ஐ.டி.யூ.சி., விடுதலை சிறுத்தைகள் ஆகிய தொழிற்சங்கங்களுடன் இணைந்து அரசு அறிவித்த குறைந்தபட்ச கூலியை விட நாளொன்றுக்கு ரூ.30 வீதம் குறைத்து நான்கு ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளனா்.
இதற்கிடையே அரசு அறிவித்த குறைந்தபட்ச கூலியான ரூ.425.40 பஞ்சப்படியுடன் கனக்கீடு செய்தால் டேன் டீ தொழிலாளா்கள் தற்போது ரூ.480-க்கு மேல் தினக் கூலி பெறுவாா்கள்.
Advertisement
ஆனால், தனியாா் எஸ்டேட் நிா்வாகங்கள் ஒப்பந்தபடி தொழிலாளா்கள் பெறும் தொகையான ரூ.433 வழங்குவதாக அரசு அறிவித்திருப்பது டேன் டீ தொழிலாளா்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, இந்த அறிவிப்பை மறுபரிசீலினை செய்து 2021-ஆம் ஆண்டு அறிவித்த தினக் கூலியான ரூ.425.40 பஞ்சப்படியுடன் ரூ.480க்குமேல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.