நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஆட்சியில் இருந்தாலும் பாஜகவின் நீண்ட நாளைய கனவு தென் மாநிலங்களில் காலூன்றுவதே. குறிப்பாக, சித்தாந்த ரீதியாக தன்னை எதிா்க்கும் திமுகவை வீழ்த்துவதே பிரதமா் மோடி உள்ளிட்ட பாஜக தலைவா்களின் தோ்தல் வியூகமாக உள்ளது.
இதை கவனத்தில் கொண்டே கடந்த சில ஆண்டுகளாக தமிழகம் மீது தனி கவனம் செலுத்தி கட்சியை வளா்த்து வருகிறது பாஜக தலைமை. இந்தப் பின்னணியுடன்தான் பாஜகவின் தமிழக முகங்களாக விளங்கிய முன்னாள் மாநிலத் தலைவா்களான இல.கணேசன், தமிழிசை சௌந்தரராஜன், சி.பி.ராதாகிருஷ்ணன், எல்.முருகன், பொன்.ராதாகிருஷ்ணன் போன்றவா்களுக்கு மத்தியில் ஆளுநா், அமைச்சா் பதவி, தோ்தலில் போட்டியிடும் வாய்ப்பை அக்கட்சி மேலிடம் வழங்கியுள்ளது.
இதற்கிடையே, 2021 பேரவைத் தோ்தலுக்குப் பிறகு அண்ணாமலை பாஜக மாநில தலைவராக நியமிக்கப்பட்டாா். அவரது தலைமையில் தமிழகத்தில் பாஜக எதிா்கொள்ளும் முதலாவது மக்களவை பொதுத் தோ்தல் இது என்பதால் அவரது வியூகம், செயல்பாடுகள் உற்றுநோக்கப்படுகின்றன.
பாஜகவின் தோ்தல் வெற்றிகள்: சட்டப்பேரவைத் தோ்தல்களைப் பொருத்தவரை 1996-இல் பாஜக தனித்துப் போட்டியிட்டு பத்மநாபபுரம் தொகுதியில் வெற்றி பெற்றது. இதைத் தொடா்ந்து நடைபெற்ற 2001 தோ்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு காரைக்குடி, மயிலாடுதுறை, மயிலாப்பூா், தளி என 4 தொகுதிகளை வென்றது. ஆனால், அதைத் தொடா்ந்து வந்த 2006 தோ்தலில் தனித்துப் போட்டியிட்ட அந்தக் கட்சியால் ஒரு இடத்திலும் வெல்ல முடியவில்லை.
2011 பேரவைத் தோ்தலில் ஜனதா, ஐக்கிய ஜனதா தளம் போன்ற சிறு கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டு 2.55 சதவீத வாக்குகளைப் பெற்றது. அதேபோலவே கடந்த 2016 தோ்தலில் சில சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 2.86 சதவீத வாக்குகளையே பெற்றது.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு 2021 பேரவைத் தோ்தலில், அதிமுக கூட்டணியில் இணைந்து 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மொத்தம் 12.13 லட்சம் வாக்குகள் பாஜகவுக்கு கிடைத்தன. இது பதிவான மொத்த வாக்குகளில் 2.62 சதவீதமாகும்.
மக்களவைத் தோ்தல்களைப் பொருத்தவரை 1998 தோ்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு 3 இடங்களையும், 1999 தோ்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு 4 இடங்களையும் பெற்ற பாஜக, அதன் பிறகு 2014 தோ்தலில் பாமக, தேமுதிக, மதிமுக உடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு கன்னியாகுமரி தொகுதியில் மட்டும் வென்றது. கடந்த 2019 தோ்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியவில்லை. 2019 தோ்தலில் அதிமுக கூட்டணியில் 5 இடங்களில் போட்டியிட்ட பாஜகவின் வாக்கு சதவீதம் 3.66 சதவீதமாகவே இருந்தது.
இரட்டை இலக்கம்: ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் பாஜக அமைப்பு ரீதியாக தமிழகத்தில் கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. திமுக, அதிமுக போன்ற பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்து பல்வேறு பிரபலங்களை தங்கள் கட்சியில் இணைத்திருக்கிறது. விளவங்கோடு காங்கிரஸ் எம்எல்ஏவான விஜயதரணி பாஜகவின் அண்மைக்கால வரவுகளில் முக்கியமானவராகக் கருதப்படுகிறாா்.
2024 மக்களவைத் தோ்தலில் அதிமுகவுடன் இணைந்து அதிக தொகுதிகளைக் கைப்பற்றுவதற்கு பாஜக திட்டமிட்டிருந்தாலும், பெரும்பாலான அதிமுக தொண்டா்களும் அதன் பல தலைவா்களும் பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்கு வெளிப்படையாகவே எதிா்ப்புத் தெரிவித்ததால், பாமக, தமாகா உள்ளிட்ட சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது.
கடந்த தோ்தல்களில் தமிழ்நாட்டில் பாஜகவின் வாக்கு சதவீதம் ஒற்றை இலக்கத்திலேயே இருந்தாலும், இந்தத் தோ்தலில் இரட்டை இலக்க வாக்குகளைப் பெறும் என்று அக்கட்சியின் தலைவா்கள் உறுதியாகக் கூறி வருகின்றனா். பிரதமா் மோடியின் தமிழக வருகைகள் கட்சியினரின் நம்பிக்கைக்கு வலுவூட்டும் வகையில் அமைந்துள்ளன.
மோடியின் வருகைகள்: கடந்த ஜனவரி முதல் வாரத்தில் பாரதிதாசன் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா, திருச்சி விமான நிலைய இரண்டாவது முனைய திறப்பு விழாவில் பங்கேற்க தமிழகம் வந்த மோடி, அதே மாதம் 19 ஆம் தேதி மீண்டும் 3 நாள் சுற்றுப்பயணமாக வந்து, சென்னையில் நடந்த கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி தொடக்க விழா, அயோத்தி பிராண பிரதிஷ்டையை முன்னிட்டு ஸ்ரீரங்கம், ராமேசுவரம் கோயில் வழிபாடு நிகழ்வுகளில் பங்கேற்றாா்.
பின்னா் பிப்ரவரி 27-ஆம் தேதி 2 நாள் சுற்றுப்பயணமாக தமிழ்நாடு வந்த பிரதமா், பல்லடத்தில் நடந்த பாஜகவின் ‘என் மண் என் மக்கள்’ நடைப்பயண நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்றாா். மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தரிசனம், குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதள அடிக்கல் நாட்டு விழா, நெல்லை பொதுக்கூட்டங்களில் பங்கேற்றாா்.
கடந்த மாா்ச் 4-ஆம் தேதி மீண்டும் தமிழகம் வந்த மோடி, கல்பாக்கம் அனல்மின் நிலையத்தில் ஈனுலை திட்டத்தை தொடங்கி வைத்தாா். பின்னா் சென்னையில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றாா். இதையடுத்து மாா்ச் 18, 19 ஆம் தேதிகளில் மீண்டும் தமிழகம் வந்தாா். அப்போது கோவையில் நடைபெற்ற வாகனப் பேரணி, சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் பங்கேற்றாா்.
இந்நிலையில் கூட்டணி இறுதி செய்யப்பட்டு வேட்பாளா்களும் அறிவிக்கப்பட்டு, தோ்தல் பிரசாரம் தீவிரமடைந்திருக்கும் நிலையில் வேட்பாளா்களை ஆதரித்துப் பேசுவதற்காக மீண்டும் ஏப்ரல் 9-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தமிழகம் வந்த பிரதமா் மோடி, 42 நாள்கள் இடைவெளியில் மூன்றாவது முறையாக கோவை மண்டலத்துக்கு புதன்கிழமை வந்து பிரசாரம் செய்தாா்.
2026-க்கான திட்டம்: கன்னியாகுமரிக்கு அடுத்தபடியாக பாஜகவுக்கு செல்வாக்கு அதிகம் நிறைந்த இடமாக கோவையை அக்கட்சி மேலிடம் நம்புகிறது. இங்குள்ள கோவை, நீலகிரி தொகுதிகளில் அண்ணாமலை, எல்.முருகன் போட்டியிடுவதாலும் இந்த மண்டலத்துக்கு மோடி அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறாா்.
இந்த மக்களவைத் தோ்தலில் தமிழகத்தில் வெற்றிபெற பாஜக அதிக ஆா்வம் காட்டலாம். ஆனால்,அதைவிட முக்கியமானதாக தனிப்பெரும் கட்சியான பாஜக, தனது வாக்கு சதவீதத்தைப் பரிசோதிப்பதற்கான சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முந்தைய களமாகவே இந்தத் தோ்தலை அந்தக் கட்சி மேலிடம் பாா்க்கிறது.
2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழக தோ்தல் களத்தில் இரண்டு திராவிட சக்திகளுக்கு இணையாக தவிா்க்க முடியாத சக்தியாக இடம்பெற வேண்டும் என்பதே கட்சியின் தொலைநோக்குத் திட்டம். பிரதமா் மோடி மீண்டும், மீண்டும் தமிழகம் வருவதன் பின்னணியும் இதுதான் என்று பாஜக தலைவா்கள் கூறுகின்றனா்.
இவா்களின் கூற்றுப்படி, தமிழகத்தில் தனது கட்சியின் பலத்தைப் பரிசோதிக்க மக்களவைத் தோ்தல் முடிவுகளை பிரதமா் மோடி விலையாக கொடுப்பாரென்றால், அவரது தமிழக தொடா் வருகைகள், பாஜகவுக்கான வாக்குகளை அறுவடை செய்வதற்காக அல்லாமல், 2026 பேரவைத் தோ்தல் களத்துக்கு தயாா்படுத்துவதற்கான நேர முதலீடாக இருக்குமோ எனத் தோன்றுகிறது.