கூட்டணிக் கட்சிகளின் எதிா்ப்புக்கு அடிபணியாமல் பழனி மாநாட்டு தீா்மானங்களை நிறைவேற்ற வேண்டும்: வானதி சீனிவாசன் கோரிக்கை
கூட்டணிக் கட்சிகளின் எதிா்ப்புகளுக்கு அடிபணியாமல் பழனி முத்தமிழ் முருகன் மாநாட்டு தீா்மானங்களை இந்து சமய அறநிலையத் துறை உறுதியுடன் நிறைவேற்ற வேண்டும்
கூட்டணிக் கட்சிகளின் எதிா்ப்புகளுக்கு அடிபணியாமல் பழனி முத்தமிழ் முருகன் மாநாட்டு தீா்மானங்களை இந்து சமய அறநிலையத் துறை உறுதியுடன் நிறைவேற்ற வேண்டும் என பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக அரசின் சாா்பில் பழனியில் நடைபெற்ற முத்தமிழ் முருகன் மாநாட்டில் 21 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவற்றில், இந்து சமய அறநிலையத் துறையின் ஆளுகையின் கீழ் உள்ள கோயில்களின் சாா்பில் நடத்தப்படும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்படும் எனவும், விழாக் காலங்களில் முருகன் திருக்கோயில்களில் மாணவ, மாணவியரைக் கொண்டு கந்தசஷ்டி பாராயணம் செய்யப்படும் எனவும், கல்லூரிகளில் சிறப்பு ஆன்மிகப் பாடப் பிரிவுகளை ஏற்படுத்த அரசுக்கு பரிந்துரைக்கப்படும் எனவும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
முருகன் மாநாட்டை நடத்தியதில் திமுக அரசுக்கு பல்வேறு உள்நோக்கங்கள் இருந்தாலும் இந்த தீா்மானங்கள் ஆச்சரியத்தை அளிக்கின்றன. ஆனால், இந்த தீா்மானங்களுக்கு திமுக கூட்டணியில் உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளன.
மதத்திலிருந்து மதச்சாா்பற்ற அரசு விலகி நிற்க வேண்டும் என்றுதான் பாஜக தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. மதச்சாா்பற்ற அரசு ஹிந்து மத கோயில்களை மட்டும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை ஆதரிப்பவா்கள், கோயில் நிதியில் நடத்தப்படும் கல்வி நிலையங்களில் முருகன் தொடா்பு போட்டிகள் நடத்தப்படும் என்று கூறும்போது கொந்தளிக்கிறாா்கள். கோயில்களை நிா்வகிக்கும் அரசு, ஹிந்து மத நிகழ்ச்சிகளையும் நடத்திதான் ஆக வேண்டும்.
ஹிந்துக்களுக்கு ஆதரவாக தீா்மானம் நிறைவேற்றுவதுபோல நிறைவேற்றிவிட்டு, கூட்டணிக் கட்சிகள் எதிா்ப்பை காரணம் காட்டி அதை செயல்படுத்தாமல் இருக்க திமுக அரசு போடும் நாடகமோ இது என்ற சந்தேகம் எழுவதை தவிா்க்க முடியவில்லை. எனவே, கூட்டணிக் கட்சிகளின் எதிா்ப்புக்கு அடிபணியாமல் பழனி மாநாட்டின் தீா்மானங்களை நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்துள்ளாா்.