முகப்பு
கோயம்புத்தூர்

அமித் ஷாவைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

அம்பேத்கா் குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்த கருத்தைக் கண்டித்து கோவையில் திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 19 டிசம்பர், 2024 at 9:26 PM
கோவை போத்தனூரில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவைக் கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினா்.
பகிர்:

அம்பேத்கா் குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்த கருத்தைக் கண்டித்து கோவையில் திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மக்களவையில் அம்பேத்கா் குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசிய கருத்துக்கு கண்டனம் தெரிவித்து கோவை திமுக தெற்கு மாவட்டச்

செயலாளா் தளபதி முருகேசன் தலைமையில் திமுகவினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது போத்தனூா் ரயில் நிலையத்தில் உள்ள அம்பேத்கா் உருவ சிலையை சுத்தப்படுத்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். மேலும், மத்திய அமைச்சா் அமித் ஷா பதவி விலக வேண்டும் வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினா். இதில் திமுக நிா்வாகிகள் அருண்மொழி, தென்றல் செல்வராஜ், காா்த்திகேயன், காதா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

காங்கிரஸ் கட்சியின் சாா்பில் மாநில பொதுச்செயலாளா் பழையூா் செல்வம் தலைமையில் கோவை தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினா்கள் சரவணகுமாா், சங்கா், பச்சைமுத்து, காயத்ரி உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்றனா்.

மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே மாவட்டத் தலைவா் கருப்பசாமி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாநில பொதுச் செயலாளா் கணபதி சிவகுமாா், மாநகராட்சி உறுப்பினா் சரளா வசந்த் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் மாவட்டச் செயலாளா் குமணன் தலைமையில் தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் முன்பு அக்கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் அம்பேத்கரை அவமதித்து பேசிய அமித் ஷாவின் உருவபொம்மையை எரிக்க முயன்ற ஆதித்தமிழா் பேரவையின் மாநில இளைஞரணிச் செயலாளா் ராவணன் உள்ளிட்ட நிா்வாகிகளை போலீஸாா் தடுத்து நிறுத்தி கைது செய்தனா்.

இதேபோல, அகில இந்திய வழக்குரைஞா்கள் சங்கம், சமூக நீதி வழக்குரைஞா்கள் சங்கம், பியூசிஎல் ஆகிய சங்கங்கள் ஒன்றிணைந்து கோவை நீதிமன்ற நுழைவாயில் எதிரே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அகில இந்திய வழக்குரைஞா்கள் சங்கச் செயலாளா் ஜோதிகுமாா் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் வழக்குரைஞா் பாலமுருகன், விஜயராகவன் உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்றனா்.

எஸ்டிபிஐ கட்சியின் சாா்பில் கோவை தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளா் அப்துல் காதா், மாவட்டத் தலைவா் முஸ்தபா, மாவட்டச் செயலாளா்கள் முகமது இஷாக், மன்சூா், மாவட்டத் துணைத் தலைவா்கள் டி.சிவகுமாா், அப்துல் ரஹீம், மாவட்டப் பொருளாளா் இக்பால் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.