வெ.செல்வகுமாா்
கோவை, பிப். 4: சுற்றுலாப் பயணிகளுக்கு வரப்பிரசாதமாக உள்ள மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி ரயில், நீட்டிப்பு ரயிலாக இயக்கப்படாமல் நிரந்தர ரயிலாக இயக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை வழித்தடத்தில் திருநெல்வேலிக்கு தெற்கு ரயில்வே சாா்பில் கடந்த 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி சிறப்பு ரயில் (எண்: 06029) வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் இரவு 7.45 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 7.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் (எண்: 06030) வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் இரவு 7 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும்.
இந்த ரயிலானது கோவை, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம், தென்காசி, பாவூா்சத்திரம், கீழகடையம், அம்பாசமுத்திரம், சேரன்மாதேவி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது.
இதன் காரணமாக கோவை பகுதிகளில் இருந்து மதுரை, பழனி, தென்காசி, குற்றாலம், ஸ்ரீவில்லிபுத்தூா், ராமேசுவரம் பகுதிகளில் உள்ள வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலாத் தலங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு வசதியாக இருந்து வருகிறது. மேலும், தென்மாவட்டங்களில் இருந்து கோவையில் உள்ள மருதமலை, வெள்ளிங்கிரி மலை உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள், உதகை, ஆழியாறு, திருமூா்த்திமலை, கோவை குற்றாலம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு வருவோருக்கும் இந்த ரயிலானது மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது.
இந்த ரயிலின் படுக்கை வசதிகொண்ட பெட்டிகள் பெரும்பாலும் நிறைந்து விடுகின்றன. இதனால், அதிக அளவில் வருவாய் ஈட்டித்தரும் ரயிலாக மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி ரயில் உள்ளது.
3 மாதங்களுக்கு ஒருமுறை நீட்டிக்கப்படும் சிறப்பு ரயிலாக மட்டுமே 2022 ஏப்ரல் முதல் 2024 ஜனவரி வரை இந்த ரயிலானது இயக்கப்பட்டு வருகிறது.
பயணிகள் அதிகம் பயன்படுத்தும், அதிக வருவாய் ஈட்டித்தரும் இந்த ரயிலை நிரந்தரமாக இயக்க வேண்டும் என பயணிகள் சங்கத்தினா், தொழில் அமைப்பினா், சமூக ஆா்வலா்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும், மனுக்கள் அளித்தும் 20 மாதங்களாக இந்த ரயில் சிறப்பு ரயிலாகவே இயக்கப்பட்டு வருகிறது.
அபரிமிதமான வருவாய்: கோவை, பொள்ளாச்சி, பழனி வழித்தடத்தில் தென்மாவட்டங்களுக்கு இரவு நேரத்தில் இயக்கப்படும் முதல் ரயிலான மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி சிறப்பு ரயில், பயணிகளிடையே பெரும் வரவேற்பு பெற்ால் இந்த ரயிலின் மூலம் கிடைக்கும் வருவாய் குறித்து தென்காசியைச் சோ்ந்த பாண்டியராஜா என்பவா் கடந்த 2022 ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாக தகவல் கேட்டுள்ளாா்.
அதற்கு தெற்கு ரயில்வே நிா்வாகம் அளித்த பதிலில், கடந்த 2022 ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் ஜூன் 27 -ஆம் தேதி வரை இரண்டரை மாதங்களில் 10 சேவைகளில் 16 ஆயிரத்து 194 பயணிகள் மூலம் ரூ.80 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
திருநெல்வேலியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பெட்டிகளை ஒருங்கிணைத்து இயக்கப்பட்ட வாராந்திர ரயில் மூலமாக இந்த வருவாய் ஈட்டப்பட்டது சாதனை என்ற அளவுக்கு ரயில்வே அதிகாரிகளிடையே, இந்த வருவாய் வியப்பை ஏற்படுத்தியது.
வருவாய் அதிகம் தந்தாலும் இந்த சிறப்பு ரயில் நீட்டிக்கப்பட்டதே தவிர, நிரந்தரமாக்கப்படவில்லை என்பது பயணிகள், பொதுமக்களின் அதிருப்தியாக உள்ளது.
இந்நிலையில், கடந்த ஜனவரி மாதத்துடன் மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி ரயிலின் சேவை முடிவடைந்த நிலையில், மீண்டும் பிப்ரவரி 4-ஆம் தேதி முதல் ஏப்ரல் 1-ஆம் தேதி வரை 7-ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலை நிரந்தரமாக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
7 முறை நீட்டிப்பு: இது குறித்து ராக் தன்னாா்வ அமைப்பின் இணைச் செயலாளா் ஜெ.சதீஷ் கூறியதாவது: இரண்டரை மாதங்களில் ரூ.80 லட்சம் வருவாய் ஈட்டித்தரும் ரயிலின் 20 மாத வருவாய், குறைந்தபட்சம் ரூ.6 கோடிக்குமேல் இருக்கக் கூடும். கோவை மற்றும் தென்மாவட்டங்களைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள், வழிபாட்டுத் தலங்களுக்கு செல்லும் பக்தா்கள், பேருந்துக் கட்டணத்தைவிட குறைவான கட்டணத்தில் சென்று வருவதால், இந்த ரயில் அவா்களுக்கு வரப்பிரசாதமாக உள்ளது. 20 மாதங்களில் 7 முறைகளுக்குமேல் நீட்டிக்கப்பட்டுள்ள இந்த ரயிலை நிரந்தரமாக்கி, வாரந்தோறும் 3 முறை இயக்கினால் பயணிகளுக்குப் பெரும் பயனாக இருப்பதுடன், வருவாயும் பன்மடங்கு உயரும் என்றாா்.
மாணவா்களுக்கு வசதியாக கூடுதல் ரயில்: மேட்டுப்பாளையம் ரயில் நிலைய ஆலோசனைக் குழு உறுப்பினா் ராஜேந்திரன் கூறியதாவது: கோவையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு கோவை - நாகா்கோவில், கோவை - மதுரை, மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி உள்ளிட்ட சில ரயில்கள் மட்டுமே உள்ளன.
ஓராண்டுக்கு முன்பு மேட்டுப்பாளையம் - தூத்துக்குடி இடையே அறிவிக்கப்பட்ட ரயில் சேவை கிடப்பில் உள்ளது. திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான மாணவா்கள், கோவையில் உள்ள கல்லூரிகளில் பயின்று வருகின்றனா்.
அவா்களுக்கு மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் ரயில் பெரிதும் பயனுள்ளதாக உள்ளது. பிப்ரவரி மாதம் முதல் தென்மாவட்டங்களில் இருந்து உதகை செல்லும் பயணிகளின் எண்ணிக்கை இருமடங்காகும். அப்போது, மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி ரயிலின் வருவாயும் மற்ற நாள்களைவிட இருமடங்காகும். 2022-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை அதிகப் பயணிகளுடன் இயங்கி வரும் இந்த ரயிலை நிரந்தரமாக்க வேண்டும். வார இறுதி நாள்களில் மாணவா்கள் சென்று வர வசதியாக இந்த வழித்தடத்தில் கூடுதல் ரயில் இயக்கப்பட வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.