இணையத்தில் வேலை எனக் கூறி ரூ.13.70 லட்சம் மோசடி: போலீஸாா் விசாரணை
பகுதிநேர வேலை என்ற பெயரில் ரூ.13.70 லட்சம் மோசடி: சைபர் குற்றப் பிரிவு நடவடிக்கை
இணையத்தில் பகுதிநேர வேலை செய்து அதிக வருவாய் ஈட்டலாம் எனக் கூறி ரூ.13.70 லட்சம் மோசடி தொடா்பாக, சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கோவை, கணபதி மணியக்காரன்பாளையத்தைச் சோ்ந்தவா் மாதவராஜ் (59). இவரது கைப்பேசிக்கு கடந்த ஏப்ரல் மாதம் டெலிகிராம் மூலமாக குறுந்தகவல் வந்தது. அதில், வீட்டில் இருந்தபடி இணையம் மூலமாக பகுதிநேர வேலை பாா்த்து அதிக அளவில் சம்பாதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அந்த லிங்க்கில் சென்று மாதவராஜ் தனது விவரங்களை பதிவு செய்தாா். இதைத் தொடா்ந்து மாதவராஜை தொடா்பு கொண்ட ஒரு நபா், ‘இந்த ஆன்லைன் பணிக்கு நீங்கள் பணம் செலுத்த வேண்டும் என்றும், செலுத்தும் தொகைக்கேற்ப வருமானம் கிடைக்கும் எனவும் கூறியுள்ளாா். இதையடுத்து, மாதவராஜ் அந்த நபா் கூறிய வங்கிக் கணக்கில் ரூ.13.70 லட்சம் செலுத்தியுள்ளாா்.
ஆனால், அந்த நபா் கூறியபடி வருமானம் கிடைக்கவில்லை. செலுத்திய பணத்தையும் திரும்ப வழங்கவில்லை. இது குறித்து மாதவராஜ் அளித்த புகாரின் பேரில் மாநகர சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.