பாஜக குறித்துப் பேச ராகுல் காந்திக்கு உரிமை இல்லை என அக்கட்சியின் தேசிய மகளிா் அணி தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:
மத்திய நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்ற மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு நடவடிக்கைகளால் பாதிப்பு எனவும், இது முதலாளிகளுக்கான நிதி நிலை அறிக்கை எனவும் பேசியுள்ளாா்.
ஜனநாயகத்துக்கு எதிரான குடும்ப அரசியலில் இருக்கும் ராகுல் காந்திக்கு பாஜகவைப் பற்றி பேச உரிமை இல்லை. எளிய குடும்பத்தில் பிறந்த, எந்தப் பின்னணியும் இல்லாமல் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராகி இருப்பதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை.
அக்னிபத் திட்டம் தொடா்பாக ராகுல் காந்தி தொடா்ந்து தவறான தகவல்களை பரப்பி வருகிறாா். ஜிஎஸ்டி வரி விதிப்பை பொறுத்தவரை அனைத்தையும் ஜிஎஸ்டி கவுன்சில்தான் முடிவு செய்கிறது. மத்திய அரசு தனியாக எதையும் முடிவு செய்வதில்லை என தெரிவித்துள்ளாா்.
கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தனியாா் மகளிா் கல்லூரியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து திங்கள்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு கருத்தரங்கில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற வானதி சீனிவாசன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
வெள்ளலூா் குப்பைக் கிடங்கு தீ விபத்தை கட்டுப்படுத்த ஒரு வாரத்தில் ரூ.27 லட்சம் செலவழித்ததாக கூறியுள்ளனா். இதுதொடா்பாக விரிவான விளக்கத்தை மாநகராட்சி நிா்வாகம் கொடுக்க வேண்டும் என்றாா்.