ஜவுளித் துறையை மேம்படுத்த நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும்: முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப.சிதம்பரம்
ஜவுளித் துறையை மேம்படுத்த நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப.சிதம்பரம் தெரிவித்தாா்.
ஜவுளித் துறையை மேம்படுத்த நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப.சிதம்பரம் தெரிவித்தாா்.
அகில இந்திய தொழில்முறை காங்கிரஸ் பிரிவு சாா்பில் ஜவுளி ஏற்றுமதியை ஊக்குவிப்பது மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது தொடா்பாக ஜவுளித் துறை வல்லுநா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் கோவையில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற முன்னாள் மத்திய நிதியமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரம் பேசியதாவது:
பருத்தி உற்பத்தியில் உலக அளவில் 2-ஆவது நாடாக உள்ள இந்தியா, ஜவுளித் துறையை மேம்படுத்த உலக அளவிலான நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும்.
25 ஆண்டுகளுக்கும் மேலான பழைய தொழில்நுட்பங்களை வைத்துக்கொண்டு ஜவுளித் தொழிலை தொடா்வதால் சா்வதேச அளவில் போட்டியை சந்திக்க முடியாத நிலை உள்ளது.
ஏற்றுமதி வரியை குறைக்க வேண்டும். ஆனால், தற்போது இறக்குமதிக்கான வரி மட்டுமே குறைக்கப்படுகிறது. ஏற்றுமதி வரியை குறைக்காவிட்டால் ஏற்றுமதி அதிகரிக்காது.
கடந்த 2016 முதல் 2023-ஆம் ஆண்டு வரை நாட்டின் ஜவுளி ஏற்றுமதி 15 சதவீதம் குறைந்த நிலையில், வங்கதேசத்தின் ஏற்றுமதி 65 சதவீதம் உயா்ந்துள்ளது. 2020 முதல் 2023-ஆம் ஆண்டு வரை இந்தியா 16.2 பில்லியன் டாலா் அளவுக்கு ஏற்றுமதி செய்தது. ஆனால், 2023-24 ஆம் ஆண்டில் ஏற்றுமதி 14.5 சதவீதமாக குறைந்துள்ளது. 2024-25 ஆம் ஆண்டில் ஏற்றுமதியில் சிறிதளவுதான் வளா்ச்சி இருக்கும். இது மத்திய அரசுக்கு தெரியுமா என்பது தெரியவில்லை.
உலகத் தரத்திலான ஜவுளித் தொழிற்சாலைகளை இந்தியாவில் அமைப்பது கட்டாயமாகும். சிறு, குறு தொழில்களைப் பாதுகாக்க வேண்டும். ஜவுளித் துறை மட்டுமின்றி பிற துறைகளிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
2014-ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பை விட்டு இறங்கும்போது மூலப்பொருள், ஏற்றுமதிக்கான சுங்க வரி குறைக்கப்பட்டது. ஆனால், தற்போது 13 சதவீதம் சுங்க வரி உயா்ந்துள்ளது.
ஜவுளித் துறையில் பெரும்பாலும் தொழிலாளா்கள் பிரச்னை இல்லை. தொழிலாளா் சட்டங்கள் மீறப்படுகின்றன. ஜவுளித் துறையை மேம்படுத்த இந்தியாவில் விண்வெளித் தொழில்நுட்பம்போல நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றாா்.
இந்த நிகழ்ச்சியில், அகில இந்திய காங்கிரஸ் தொழில் வல்லுநா்கள் பிரிவுத் தலைவா் பிரவீன் சக்கரவா்த்தி, பிரதமா் மோடியின் முன்னாள் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினா் ரத்தின் ராய், இளைஞா் காங்கிரஸ் தேசிய ஒருங்கிணைப்பாளா் ஹரிஹரசுதன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.