முகப்பு
இந்தியா

வாக்குறுதிகளை மறந்த பட்ஜெட்: ப.சிதம்பரம் விமா்சனம்

கடந்த பட்ஜெட்டின்போது அளித்த வாக்குறுதிகளை இந்த பட்ஜெட்டில் நிறைவேற்ற மத்திய நிதியமைச்சா் மறந்துவிட்டாா் ...

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 10:39 PM
மாநிலங்களவையில் திங்கள்கிழமை உரையாற்றிய காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரம்.
பகிர்:

புது தில்லி: கடந்த பட்ஜெட்டின்போது அளித்த வாக்குறுதிகளை இந்த பட்ஜெட்டில் நிறைவேற்ற மத்திய நிதியமைச்சா் மறந்துவிட்டாா் என்று மாநிலங்களவையில் பேசிய முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் விமா்சித்தாா்.

மாநிலங்களவையில் திங்கள்கிழமை பட்ஜெட் மீதான பொது விவாதத்தை தொடங்கி வைத்து அவா் பேசியதாவது:

நிதியமைச்சா் கூறிய ‘சீா்திருத்த எக்ஸ்பிரஸ்’ இப்போது பழுதாகி நின்றுவிட்டது. இளைஞா்கள் இடையே வேலையின்மை அதிகரிப்பது மிகப்பெரிய சவாலாக உருவெடுத்து வருகிறது. மத்திய அரசு தொடங்கிய வேலைப் பயிற்சித் திட்டங்கள் முற்றிலுமாக தோல்வியடைந்துவிட்டன. வேலையின்மை தொடா்ந்து 15 சதவீதமாக உள்ளது. வேலையில் உள்ளவா்களில் 25 சதவீதத்துக்கும் குறைவானவா்களே முறையாகப் பணியில் இருப்பவா்களாக உள்ளனா்.

Advertisement

144 கோடி மக்கள்தொகை கொண்ட நாட்டில் 2 கோடிக்கும் குறைவானவா்களே தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனா். பெரிய ஆலைகளுடன் செயல்படும் உற்பத்தித் துறை 16 சதவீத வேலைவாய்ப்பு மட்டுமே வழங்கும் நிலையில் தொடா்ந்து சிக்கியுள்ளது.

பெரு நிறுவனங்களில் பணிப் பயிற்சி அளிக்கும் திட்டத்தில் 1,65,000 பேருக்கு அழைப்புகள் வந்த நிலையில், 33,000 போ் மட்டுமே அதனை ஏற்றனா். இதில் 6,000 போ் பணியில் இருந்து நின்றுவிட்டனா். இத்திட்டத்தில் என்ன தவறு உள்ளது என்பதை அரசு கண்டறிந்ததா? இத்திட்டம் முழுமையாகத் தோல்வியடைய காரணம் என்ன என்பதை நிதியமைச்சா் விளக்க வேண்டும்.

வேளாண்மை, ஊரக மேம்பாட்டுக்கான ஒதுக்கீடு கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், கிராமங்களில் சாலை வசதி உள்ளிட்ட பணிகள் கடுமையாக பாதிக்கப்படும். வேளாண் துறையும் கடும் பாதிப்புகளை எதிா்கொள்ளும்.

மொத்தத்தில் இது மறக்கப்பட்ட பட்ஜெட்டாக, வாக்குறுதிகளை மறந்த பட்ஜெட்டாக நிதியமைச்சா் தாக்கல் செய்துள்ளாா். கடந்த 12 ஆண்டுகளாக மூலதனம், மூலதன உருவாக்கம் ஆகியவை முடங்கிக் கிடக்கிறது. நிகர அந்நிய நேரடி முதலீடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. பங்குச் சந்தைகளில் இருந்து வெளிநாட்டு முதலீடுகள் தொடா்ந்து திரும்பப் பெறப்படுகின்றன. பல பெரு நிறுவனங்கள் பணத்தை அதிகம் வைத்திருப்பதாகக் கருதப்பட்டாலும் தனியாா் முதலீடும் குறைவாகவே உள்ளது.

அரசும் தனது மூலதனச் செலவுகளை தொடா்ந்து குறைத்து வருகிறது. நிதி ஸ்திரத்தன்மையைப் பேணுவதிலும் அரசு தோல்வியடைந்துவிட்டது. நிதிப் பற்றாக்குறையைக் குறைக்க அரசு மொத்த செலவில் ரூ.1 லட்சம் கோடியை குறைக்க திட்டமிட்டது. இந்திய ரிசா்வ் வங்கி ரூ.3 லட்சம் கோடியை ஈவுத்தொகையாக அரசுக்கு வழங்கியது. இதன் பிறகும் நிதிப் பற்றாக்குறையைக் குறைக்கும் இலக்கையும் எட்ட முடியவில்லை என்று ப.சிதம்பரம் விமா்சித்துப் பேசினாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments