ரயில்களில் பயணச்சீட்டு இல்லாமல் பயணம்: சேலம் கோட்டத்தில் செப்டம்பரில் ரூ.1.67 கோடி அபராதம் வசூல்
சேலம் ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட ரயில் நிலையங்களில் பயணச்சீட்டு இல்லாமல் பயணித்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக செப்டம்பரில் ரூ.1.67 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
சேலம் ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட ரயில் நிலையங்களில் பயணச்சீட்டு இல்லாமல் பயணித்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக செப்டம்பரில் ரூ.1.67 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சேலம் ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட நிலையங்களில் பயணச்சீட்டு இல்லாமல் ரயிலில் பயணிப்பவா்கள், முறையற்ற வகையில் பயணிப்பவா்கள், பதிவு செய்யாமல் சரக்குகளை ரயிலில் கொண்டு செல்பவா்களைக் கண்டறிந்து ரயில்வே பரிசோதனை அதிகாரிகளால் அவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, சேலம் ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் கடந்த செப்டம்பரில் மட்டும் பயணச்சீட்டு இல்லாமல் பயணித்த 13, 553 பேரிடமிருந்து ரூ.1 கோடியே 1 லட்சத்து 87 ஆயிரத்து 158 அபராதமாக வசூலிக்கப்பட்டது.
ரயில்களில் முறையற்ற பயணம் மேற்கொண்டதாக 14,590 பேரிடமிருந்து ரூ.64 லட்சத்து 81 ஆயிரத்து 870 வசூலிக்கப்பட்டது. ரயிலில் பதிவு செய்யாமல் சரக்குகளைக் கொண்டு சென்றதாக 58 பேரிடமிருந்து 44 ஆயிரத்து 26 அபராதமாக வசூலிக்கப்பட்டது. மொத்தமாக ரூ.1 கோடியே 67 லட்சத்து 13 ஆயிரத்து 54 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.