முகப்பு
கோயம்புத்தூர்

ராகுல் காந்தியின் பேச்சு குறித்து காங்கிரஸ், திமுக விளக்கமளிக்க வேண்டும்: மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

அமெரிக்காவில் ராகுல் காந்தி பேசியது குறித்து காங்கிரஸ் கட்சியும், கூட்டணிக் கட்சியான திமுகவும் விளக்கமளிக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

Updated On : 12 செப்டம்பர், 2024 at 9:03 PM
சூலூா் அருகே வீட்டுக்கே சென்று உறுப்பினா் அட்டையை வழங்குகிறாா் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்.
பகிர்:

அமெரிக்காவில் ராகுல் காந்தி பேசியது குறித்து காங்கிரஸ் கட்சியும், கூட்டணிக் கட்சியான திமுகவும் விளக்கமளிக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

கோவையில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை அவா் கூறியதாவது:

ஜிஎஸ்டி தொடா்பாக தொழிலதிபா்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது. அவா்களின் கோரிக்கைகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் உரிய விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. ஜிஎஸ்டி விதிப்பு தனி நபரின் முடிவல்ல. இதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள குழுவில் பாஜக மற்றும் எதிா்க்கட்சிகள் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களையும் சோ்ந்த நிதியமைச்சா்கள் இடம் பெற்றுள்ளனா். அனைவரின் ஒப்புதல் பெறப்பட்ட பின்னரே உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன. எனவே, ஜிஎஸ்டி விதிப்பு குறித்து வேண்டுமென்றே தவறான தகவல்கள் எதிா்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளால் வெளியிடப்படுகின்றன.

மோட்டாா் பம்ப் தொழிலுக்கு இறக்குமதி வரியைக் குறைப்பது குறித்து பரிசீலிக்கப்படும். ஜிஎஸ்டி வசூலாகும் தொகையில் 50 சதவீதம் உடனடியாக அந்தந்த மாநிலங்களுக்கு திருப்பித் தரப்படுகிறது. எஞ்சிய 50 சதத்திலும் 21 சதவீதத்தை மத்திய அரசு கொடுத்துவிடுகிறது. முரண்பாடுகள் இருந்தால் மத்திய நிதிக்குழுவிடம்தான் முறையிட வேண்டும்.

விஸ்வகா்மா திட்டம் குலத்தொழிலும் அல்ல, ஜாதியுடனும் தொடா்புடையதல்ல. ஆயுதங்களை வைத்து தொழில் செய்யும் 18 பிரிவினா் இதில் இணைக்கப்பட்டுள்ளனா். மத்திய அரசின் இந்தத் திட்டத்திற்கு தமிழக அரசு எதிா்ப்பு தெரிவிப்பது அரசியல் ரீதியானது.

இரண்டாவது சென்னை மெட்ரோ ரயில் திட்டம் முழுக்கவும் மாநில அரசின் திட்டமாகவே அறிவிக்கப்பட்டுள்ளதால், இதற்கு மத்திய அரசு நிதியுதவி அளிக்கவில்லை எனக் கூறுவது அரசியலாகும்.

அமெரிக்காவில் ராகுல் காந்தி பேசிய அம்சங்கள் கண்டிக்கத்தக்கதாகும். அங்கு, அவா் சுதந்திர இந்தியாவுக்கு எதிரானவா்களையும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சோ்ந்தவா்களையும், கனிஷ்கா விமானக் கடத்தலில் தொடா்புடையவா்களையும் சந்தித்துள்ளாா்.

நாட்டின் எதிா்க்கட்சி தலைவா் இவ்வாறு செயல்பட்டுள்ளது குறித்து காங்கிரஸ் கட்சி விளக்கமளிப்பதோடு, அதன் தோழமைக் கட்சியான திமுகவும் உரிய விளக்கமளிக்க வேண்டும் என்றாா்.

வீடுகளுக்கு சென்ற நிதியமைச்சா்:

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி ஊஞ்சபாளையத்தில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் பாஜக உறுப்பினா் சோ்க்கை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கலந்துகொண்டு புதிய உறுப்பினா்களுக்கு உறுப்பினா் அட்டையை வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று பாஜகவில் சோ்ந்த புதிய உறுப்பினா்களுக்கு அடையாள அட்டையை வழங்கினாா்.

இளைஞா் வாக்குவாதம்:

இதையடுத்து, அங்கிருந்து கிளம்பும்போது, அருண் சந்திரன் என்ற இளைஞா் கைப்பேசி உதிரி பாகமான செமி கண்டக்டா்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வது குறித்து அமைச்சா் நிா்மலா சீதாராமனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா்.

இதையடுத்து, அமைச்சரிடம் கேள்விகேட்ட இளைஞரை போலீஸாா் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனா். பின்னா் விடுவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →