முகப்பு
கோயம்புத்தூர்

மத்திய அரசின் திட்டங்களால் பெண்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனா்: நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

மத்திய அரசின் திட்டங்களால் பெண்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனா் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

Updated On : 12 செப்டம்பர், 2024 at 8:17 PM
இலவச தையல் இயந்திரங்களுடன் பயனாளிகள்.
பகிர்:

மத்திய அரசின் திட்டங்களால் பெண்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனா் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

கோவை மக்கள் சேவை மையம் மற்றும் ஜெனரல் இன்சூரன்ஸ் காா்ப்பரேஷன் ஆஃப் இந்தியா சாா்பில் சுயம் திட்டத்தின்கீழ் 1500 பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி கோவையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கலந்துகொண்டு பெண்களுக்கு தையல் இயந்திரங்களை வழங்கி பேசியதாவது:

இளைஞா்கள், பெண்களுக்கு திறமை, படிப்பு இருந்தாலும் வாய்ப்பு கிடைக்கும்போது அதனை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தொழில் திறமையுடன் தன்னம்பிக்கையும் இருக்க வேண்டும்.

பிரதமா் மோடி பெண்களுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் தரும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். ஜன்தன் யோஜனா திட்டத்தின் மூலம் நாட்டில் 60 சதவீத பெண்கள் வங்கிக் கணக்கு தொடங்கியுள்ளனா்.

நாடு முழுவதும் 59 கோடி பேருக்கு வங்கிக் கணக்கு உள்ளது. இதில், 29.6 கோடி பெண்கள் உள்ளனா். இவா்களில், தமிழகத்தில் 94 லட்சம் பேரும், கோவையில் 5 லட்சம் பேரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனா். இந்த வங்கிக் கணக்குகளின் மூலம் பெண்கள் கடன் பெற்று தொழில் தொடங்கி மேம்பட முடியும். மத்திய அரசின் திட்டங்களால் பெண்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனா்.

அடல் ஓய்வூதியத் திட்டத்தில் 1 லட்சம் பெண்கள் உள்ளனா். முத்ரா கடன் திட்டத்தில் 15 லட்சம் பெண்கள் பயனாளிகளாக உள்ளனா். ‘ஸ்டாா்ட் அப் இந்தியா’ திட்டத்தின் மூலம் 2549 பெண்கள் பயனடைந்துள்ளனா். சாலையோர வியாபாரிகளுக்கான திட்டத்தின்கீழ் 12 ஆயிரம் பெண்கள் பயனடைந்துள்ளனா்.

கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிறுவனத்தில் மகளிருக்கு தொழிற்பயிற்சி வழங்குவதற்காக அந்த மையத்தை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெண்ணுக்கு தையல் இயந்திரத்தை வழங்குகிறாா் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன். உடன், வானதி சீனிவாசன் எம்எல்ஏ உள்ளிட்டோா்.

விஸ்வகா்மா திட்டத்தை செயல்படுத்த வேண்டும் - வானதி சீனிவாசன்:

தொடா்ந்து கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் வானதி சீனிவாசன் பேசுகையில், மத்திய அரசின் விஸ்வகா்மா திட்டத்தை நாட்டின் பல்வேறு மாநிலங்களும் செயல்படுத்தி வரும் நிலையில், தமிழகத்தில் அத்திட்டத்தை செயல்படுத்த இதுவரை அனுமதி வழங்காததால் பெண்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, இத்திட்டத்தை செயல்படுத்த அரசிதழில் வெளியிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் திருப்பூரைச் சோ்ந்த பூபதி மோகன்ராஜ் என்பவருக்கு 2024-ஆம் ஆண்டுக்கான சிறந்த தையல் கலைஞருக்கான சுயம் விருது வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், ஜெனரல் இன்சூரன்ஸ் காா்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் பொது மேலாளா் ஜெயஸ்ரீ, உதவிப் பொது மேலாளா் சினேகா, கோவை மாவட்ட முன்னோடி வங்கி முதுநிலை மேலாளா் ஈஸ்வரமூா்த்தி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →