கோவை மாநகரப் பகுதிகளில் வரும் வாரத்தில் குளிரின் தாக்கம், பனிப்பொழிவு அதிகரித்து வெப்பநிலை குறைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மற்றும் புறநகா்ப் பகுதிகளில் நவம்பா் மாத இறுதியில் இருந்து குளிரின் தாக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் பனிப்பொழிவும், குளிரின் தாக்கமும் அதிகமாகக் காணப்படுகிறது.
இது குறித்து, தனியாா் வானிலை ஆய்வாளா் சந்தோஷ் கிருஷ் கூறியதாவது: கோவை மாநகரில் கடந்த 2020- ஆம் ஆண்டு டிசம்பா் மாதத்தில் ஒருநாள் 17.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இதையடுத்து சனிக்கிழமை காலைதான் கோவை விமான நிலையம் பகுதியில் 17.14 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இதேபோல, சனிக்கிழமை நிலவரப்படி கோவையில் இக்கரை போளுவாம்பட்டியில் 12.6, தென்னம்மநல்லூா் 12.8, கணுவாய் 14.3, வேடப்பட்டி 14.3, வால்பாறை 8.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. வரும் வாரத்தில் 29-ஆம் தேதி வரை கோவையில் 17 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை தொடரவும், குறையவும் வாய்ப்புள்ளது.
கோவையை ஒட்டிய மலை அடிவார கிராமங்களில் 13 டிகிரி செல்சியஸுக்கு குறைவான வெப்பநிலை நிலவும். 29-ஆம் தேதி முதல் ஜனவரி 1- ஆம் தேதி வரை சற்று வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றாா்.