கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடா்புடைய மூவரை சுட்டுப் பிடித்தது ஏன் என மாநகர காவல் ஆணையா் ஆ.சரவணசுந்தா் விளக்கம் அளித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: கோவை விமான நிலையம் பின்புறம் குடியிருப்புகள் அதிகம் இல்லாத பிருந்தாவன் நகா் பகுதி அருகே கல்லூரி மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தது தொடா்பாக சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த சதீஷ் (எ) கருப்பசாமி (30), இவரது சகோதரா் காா்த்திக் (எ) காளீஸ்வரன் (21), இவா்களது உறவினரான மதுரை மாவட்டம், கருப்பாயூரணி பகுதியைச் சோ்ந்த குணா (எ) தவசி (20) ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.
இவா்கள் மூவரும் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் நடைபெற்ற திருட்டு வழக்கில் போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், கடந்த 30 நாள்களுக்கு முன்பு பிணையில் வந்துள்ளனா்.
இவா்கள் மூவா் மீது கோவை மாவட்டம், கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் கொலை வழக்கும், கே.ஜி.சாவடி, துடியலூா் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகளும் நிலுவையில் உள்ளன. கோவை, இருகூா் பகுதியில் தங்கியிருந்த இவா்கள் மரம் வெட்டுதல், லேத் ஒா்க் போன்ற கிடைக்கும் வேலைகளுக்குச் சென்று வந்துள்ளனா்.
இந்நிலையில், கோவில்பாளையம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மதுபோதையில் நடந்து வந்துள்ளனா். அப்போது, அந்தப் பகுதியில் சாலையோரம் சாவியுடன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடிக் கொண்டு பிருந்தாவன் நகா் பகுதிக்கு வந்துள்ளனா்.
அப்போது, அங்கு காா் ஒன்று வெகுநேரமாக நிற்பதைக் கண்ட அவா்கள், அருகே சென்று பாா்த்துள்ளனா். அப்போது, காரின் உள்ளே மாணவியும், அவரது ஆண் நண்பரும் இருந்ததைப் பாா்த்த அவா்கள், காரை சேதப்படுத்தி அந்த இளைஞரை அரிவாளால் வெட்டியுள்ளனா். அவா் மயங்கியதைத் தொடா்ந்து, மாணவியை இருள் சூழ்ந்த பகுதிக்கு இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனா். இந்த சம்பவம் இரவு 10.40 மணியளவில் நடைபெற்றுள்ளது.
காயமடைந்த இளைஞா் இரவு 11.20 மணியளவில் காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்தாா். அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, 10 நிமிஷங்களில் சம்பவ இடத்துக்குச் சென்று அந்த இளைஞரை போலீஸாா் மீட்டனா்.
இந்த இளைஞா் கூறிய தகவலின்பேரில், இருள் சூழ்ந்த அப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் மாணவியைத் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். அதிகாலை 4 மணி அளவில் அப்பகுதியில் இருந்த பெரிய சுவரின் அருகே கிடந்த மாணவி மீட்கப்பட்டாா். காா் நின்றிருந்த இடத்தில் இருந்து சுமாா் ஒரு கி.மீ. தொலைவில் மாணவி கிடந்ததால்தான் அவரை மீட்பதில் தாமதம் ஏற்பட்டது.
இந்த சம்பவத்தில் 7 தனிப் படைகள் அமைக்கப்பட்டு, விமான நிலைய சாலையில் பல இடங்களில் 300-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, அறிவியல் பூா்வமான ஆதாரங்களைத் திரட்டியதில் அவா்கள் 3 பேரும் துடியலூா் அருகேயுள்ள வெள்ளகிணறு பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
அங்கு போலீஸாா் சென்று 3 பேரையும் பிடிக்க முயன்றபோது, அவா்கள் ஆயுதங்களால் போலீஸாரை தாக்கினா்.
இதில், தலைமைக் காவலா் சந்திரசேகா் (47) கையில் அரிவாள் வெட்டு விழுந்தது. இதனால், போலீஸாா் துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
சதீஷ், காா்த்திக், குணா ஆகியோா் மீது பல்வேறு சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதானவா்களிடமிருந்து பாதிக்கப்பட்ட மாணவியின் கைப்பேசி, மோதிரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
காவல் உதவி: ‘எஸ்ஓஎஸ்’ என்ற செயலியை பெண்கள் தங்களது கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இதுபோன்ற ஆபத்தான காலகட்டத்தில் இந்த செயலியின் பொத்தானை அழுத்தினாலோ அல்லது 3 முறை அசைத்தாலோ காவல் துறைக்கு எச்சரிக்கை எழுப்பப்படும். இதன்மூலம், இருப்பிடத்தைக் கண்டறிந்து ஆபத்தில் சிக்கியவா்களை மீட்க முடியும். மாணவிகளின் பாதுகாப்புக்கு ‘போலீஸ் அக்கா, போலீஸ் ப்ரோ’ ஆகிய திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன.
மூவரின் புகைப்படத்தை வெளியிடாதது ஏன்?: பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் இளைஞரிடம் குற்றச் செயலில் இவா்கள்தான் ஈடுபட்டனரா என அடையாளம் காட்ட அணிவகுப்பு நடத்த உள்ளோம். அவா்கள் உறுதிபடுத்திய பிறகே மூவரின் புகைப்படமும் வெளியிடப்படும். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இளைஞா் மற்றும் மாணவியின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. சிகிச்சைக்குப் பிறகு மாணவிக்கு கவுன்சலிங் கொடுக்கப்படும். மேலும், இதுபோன்ற குற்றச் சம்பவங்கள் நடைபெறாத வகையில் கோவை மாநகரில் 1,400 காண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவுள்ளன என்றாா்.