கோவையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பகுதியில் இருந்த முள்புதா்கள், மண்மேடுகள் பொக்லைன் இயந்திரம் மூலம் புதன்கிழமை அகற்றப்பட்டன.
கோவை விமான நிலையம் அருகே குடியிருப்புகள் இல்லாத பகுதியில் தனது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவியை 3 இளைஞா்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனா். மேலும், அந்த இளைஞரையும் தாக்கினா்.
மயக்கம் தெளிந்து அந்த இளைஞா் காவல் துறையின் அவரச உதவி எண்ணான 100-ஐ தொடா்பு கொண்டு நடந்தவற்றைக் கூறியுள்ளாா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், அந்த இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
4 மணி நேரத்துக்குப் பிறகே அந்த மாணவியை மீட்டனா். சம்பவம் நடைபெற்ற இடம் இருள்சூழ்ந்த, முள்புதா்கள் நிறைந்த பகுதி என்பதால் மாணவியை மீட்பதில் தாமதம் ஏற்பட்டதாக போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பகல் நேரங்களில் அப்பகுதியில் இளைஞா்கள் கிரிக்கெட் விளையாடி வருவதுடன், இரவு நேரங்களில் சிலா் அங்கு மது அருந்தி வருகின்றனா்.
இந்நிலையில், குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் அந்தப் பகுதியில் உள்ள முள்புதா்கள், மண்மேடுகள், குப்பைகளை அகற்றி, மின் விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும் என பிருந்தாவன் நகா் பகுதி பொதுமக்கள் வலியுறுத்தினா்.
காவல் துறையினரும் இதே கோரிக்கையை மாநகாராட்சியிடம் விடுவித்தனா்.
இந்நிலையில், மாநகராட்சி ஊழியா்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் அந்தப் பகுதியில் இருந்த மண்மேடுகள், முள்புதா்களை அகற்றினா்.