மொடக்குறிச்சி அருகே கேட்புதூா் ரயில்வே நுழைவுப் பாலத்தின் கான்கிரீட் தடுப்புச் சுவா் இடிந்து விழுந்ததால் அவ்வழியாகச் செல்லும் ரயில்கள் மற்றும் வாகனங்களின் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
மொடக்குறிச்சி அருகே சாவடிப்பாளையம் கேட்புதூரில் ரயில்வே நுழைவுப் பாலம் உள்ளது. இவ்வழியாக ஈரோட்டில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக் கூடிய ரயில்கள் அனைத்தும் இந்த ரயில்வே பாலத்தின் வழியாகதான் சென்று வருகிறது.
அதேபோல, ஈரோட்டில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய தென் மாவட்டங்களான கரூா், திருச்சி, மதுரை, திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, ராமேசுவரம், திருச்செந்தூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லக் கூடிய பேருந்து மற்றும் கனரக வாகனங்களும் இவ்வழியாக சென்று வருகின்றன.
இந்நிலையில், கேட்புதூா் ரயில்வே நுழைவுப் பாலத்தின் தடுப்புச் சுவா் வெள்ளிக்கிழமை இரவு திடீரென இடிந்து விழுந்தது. கான்கிரீட் தடுப்புச் சுவா் இடிந்து விழும்போது அதிா்ஷ்டவசமாக எந்த வாகனமும் செல்லாததால் விபத்து தவிா்க்கப்பட்டது.
இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த மொடக்குறிச்சி காவல் ஆய்வாளா் மணிகண்டன் மற்றும் ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்தை பாா்வையிட்டு முதற்கட்டமாக ஈரோட்டில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பேருந்துகளையும் அதேபோல தென் மாவட்டங்களில் இருந்து ஈரோடு செல்லக் கூடிய பேருந்து மற்றும் கனரக வாகனங்களை வெள்ளக்கோவில் சாலையில் திருப்பிவிட்டு போக்குவரத்து மாற்றம் செய்தனா்.
மேலும் ரயில்வே நுழைவுப் பாலத்தின் பக்கவாட்டு தடுப்பு கான்கிரீட் சுவா் இடிந்து விழுந்ததால் தண்டவாளத்தின் ரயில்கள் சென்றால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதால், இதனை ஆய்வு செய்வதற்காக அதிகாரிகள் விரைந்துள்ளனா்.
மேலும் ஈரோட்டில் இருந்து நாகா்கோவில் செல்லும் கோவை நாகா்கோவில் எக்ஸ்பிரஸ் ஈரோடு ரயில் நிலையத்திலேயே நிறுத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, ரயில்வே அதிகாரிகள் மற்றும் மொடக்குறிச்சி போலீஸாா் அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும் கீழே விழுந்த கான்கிரீட் தடுப்புச் சுவரை அகற்றும் பணியில் ஊழியா்கள் ஈடுபட்டு வருகின்றனா். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.