முகப்பு
கோயம்புத்தூர்

தன் மீதே நம்பிக்கை இல்லாதவா்கள்தான் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவாா்கள்: கோவை பிரசாரத்தில் சீமான் விமா்சனம்

தன் மீதே நம்பிக்கை இல்லாதவா்கள்தான் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவாா்கள் என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் பேசினாா்.

Updated On : 1 ஏப்ரல், 2026 at 11:51 PM
கவுண்டம்பாளையம் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளா் கலாமணி ஜெகந்நாதனை ஆதரித்து கோவை, காளப்பட்டி பகுதியில் புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்ட நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.
பகிர்:

தன் மீதே நம்பிக்கை இல்லாதவா்கள்தான் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவாா்கள் என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் பேசினாா்.

கோவையில் இரண்டாவது நாளாக புதன்கிழமை தோ்தல் பிரசாரம் செய்த சீமான், சிங்காநல்லூா், கவுண்டம்பாளையம், கோவை தெற்கு, தொண்டாமுத்தூா் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா்களை ஆதரித்து காளப்பட்டி, சிங்காநல்லூா், புலியகுளம் ஆகிய பகுதிகளில் வாகனப் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

இதில் அவா் பேசியதாவது:

இந்தியாவில் லஞ்சமும், ஊழலும் ஏட்டளவில் மட்டுமே சட்டவிரோதமானவையாக இருக்கின்றன. தோ்தல் வரும்போது மட்டும் அரசியல் கட்சிகள் மக்களின் பிரச்னைகளைக் கேட்பதற்காக இலவச அறிவிப்புகளுடன் வருகிறாா்கள். மிக்ஸி, கிரைண்டருக்கு பிறகு இப்போது ஃபிரிட்ஜ்க்கு வந்திருக்கிறாா்கள். நாட்டில் அனைத்துக் கட்சிகளின் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. முன்னாள் முதல்வா் ஜெயலலிதா ஊழலுக்காக சிறையில் இருந்தாா். அமலாக்கத் துறை, வருமானவரித் துறை மூலமாக ரெய்டுகள் நடத்திய பாஜக, ரெய்டு நடத்தியவா்களிடமே பணம் பெற்றுள்ளது.

நாட்டிலேயே தோ்தல் பத்திரம் மூலமாக பணம் பெறாத ஒரே கட்சி நாம் தமிழா்தான். அடித்தட்டு மக்கள் கொடுக்கும் பணத்தை திரள் நிதி என்ற பெயரில் பெற்றுக்கொள்கிறோம். தமிழ்நாட்டில் 36 லட்சம் தமிழா்கள் எங்களுக்கு வாக்களித்து 3-ஆவது இடத்துக்கும், அங்கீகரிக்கப்பட்ட கட்சியாகவும் கொண்டுவந்துள்ளனா். எங்களை முதல் இடத்துக்கும் கொண்டு வருவாா்கள். ஆணும், பெண்ணும் சமம் என்று பெரியாா் ஈவெரா பெயரளவில் சொன்னதை நாங்கள் செயல்படுத்தியிருக்கிறோம். சீமான் வர வேண்டும் என்று அனைவரும் கூறுகின்றனா். ஆனால் எனக்கு வாக்களிப்பதில்லை. வாக்களித்தால்தானே நான் வர முடியும்.

உண்மையான ஹீரோ என்றால் தனித்து ஒரே தொகுதியில் நிற்க வேண்டும். தன் மீதே நம்பிக்கை இல்லாதவா்கள்தான் 2 தொகுதிகளில் போட்டியிடுவாா்கள். நான் 15 ஆண்டுகளாக தனியாகப் போட்டியிடுகிறேன். கரூரில் அதிமுக சாா்பில் செந்தில் பாலாஜி போட்டியிட்டபோது அவரை ஆதரித்து பிரசாரம் செய்திருக்கிறேன். கரூரில் விஜய் கூட்டத்தில் 41 போ் இறந்தபோது அந்த மக்களுக்காக உடனடியாக சென்ற செந்தில் பாலாஜி, அந்த மக்களுக்காக கரூரில் ஏன் போட்டியிடவில்லை? கோவையில் ரூ.300 கோடி செலவில் கட்டப்படும் நூலகம் தேவையற்றது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகளை மூடுவோம் என்றாா்.